Search This Blog

Tuesday, December 7, 2010

பட்டினப்பாலை-மூலமும் எளிய உரையும்

பட்டினப்பாலை பாட்டும் எளிய உரையும்
காவிரியின் பெருமை
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன் கொழிக்கும் (1-7)
கருத்துரை
குற்றமற்ற புகழினையுடைய வெள்ளிக்கோள், தான் நிற்கின்ற வடதிசையிலிருந்து தென் திசைக்குப் போனாலும், தன்னைப் (வானத்தை) பாடி, மழைத்துளிகளையே உணவாக உண்டு வாழும் வானம்பாடிப் பறவை தனக்கு உணவான மழைத்துளிகளைப் பெற முடியாமல் வருந்துமாறு மழை மேகம் திசை மாறி மழை பெய்யாது பொய்த்தாலும் தான் பொய்க்காமல் இருப்பது காவிரியாறு. இக்காவிரியாறு குடகுமலையில் தோன்றி கடல் போன்று எங்கும் பரந்து பொன்னாக விளை நிலங்களைச் செழிக்கச் செய்யும்.
(காவிரியாற்றின் சிறப்பினையும்,. வெள்ளிக்கோள் வடக்கிருக்கும் என்பதையும், அது திசை மாறி தென் திசை சென்றால் மழை பெய்யாது என்பதனையும் பிற இலக்கியங்களிலும் காணலாம்.
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட (புறம் 35.7-8)


கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை (சிலப்பதிகாரம் 10,102)


வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி (பதிற்றுபத்து 24)
சொற்பொருள் விளக்கம்
வசை – குற்றம் , இல்- இல்லாத , புகழ்- புகழ் , வயங்கு – விளங்கு , வெண்மீன் – வெள்ளிக்கோள் , திசை- வடக்குதிசை , திரிந்து- மாறுதல், வேற்றிடம் செல்லுதல், தெற்கு- தென்திசை, ஏகினும் –போனாலும். தற்பாடிய- தன்னைப் பாடிய, (வானை நோக்கிப் பாடுவது வானம்பாடி- ஆதலின் தற்பாடி என்றனர்) தளி- மழைத்துளி கிடைக்காது) வருந்தி, புயல்- மேகம் , மாறி- மாறி ,வான்- மேகம், பொய்ப்பினும் – மழை பெய்யாது போயினும், தான் – தான் (காவிரி ) பொய்யா – பொய்க்காது , மலை – குடகு மலை , தலைய – தலைமையிடமாகக் கொண்டு தோன்றி , கடற்காவிரி- கடலைச் சென்றடையும் காவிரி ,புனல்-நீர் , பரந்து – எங்கும் பரவி, பொன்- தங்கம் ,(நீர் வளத்தால் நிலம் செழித்தலால், பொன் என்றனர். காவிரிக்குப் பொன்னி என்ற பெயரும் உண்டு) கொழிக்கும்- செழிக்கும்.
மருத நிலத்தின் வளமை
விளைவு அறா வியன் கழனி
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
தீத் தெறுவின் கவின் வாடி
நீர்ச் செறுவின் நீள் நெய்தற்
பூச்சாம்பும் புலத்து ஆங்கண்,
காய்ச் செந்நெல் கதிர் அருந்து
மோட்டு எருமை முழுக்குழவி
கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் , குலை வாழை,
காய்க் கமுகின் , கமழ் மஞ்சள்
இனமாவின் இணர்ப் பெண்ணை
முதற் சேம்பின் முளை இஞ்சி (8-19)
காவிரியாறு பாய்வதால் சோழ நாடு பெற்றிருந்த நிலவளத்தை 8 முதல் 19 வரையிலான 12 வரிகளிலே ஆசிரியர் சுட்டியுள்ளார்.
(க.ரை) சோழ நாட்டு அகன்ற வயல்களில் விளைச்சல் நீங்காது நடந்து கொணடேயிருக்கும் . அவ்வயல்களில் விளைந்த நன்கு முற்றிய கரும்பினைப் பாகாகக் காய்ச்சுகின்ற மணம் கமழும் ஆலைகளும் உண்டு. அவ்வாலைகளில் இருந்து வரும் நெருப்புப் புகையின் வெப்பத்தால் நீர் நிறைந்த வயல்களில் நீண்டு வளர்ந்திருக்கும் நெய்தல் பூக்கள், அழகு கெட்டு வாடிப் போகும். அவ்விடங்களிலே விளைந்த காய்ந்த செந்நெல்லின் கதிர்களைத் தின்ற பெரிய வயிற்றையுடைய எருமை மாட்டின் முதிர்ந்த கன்றுகள், நெற்கூடுகளின் நிழலிலே படுத்து உறங்கும்.
மருத நிலத்தில் குலைகளையுடைய தென்னை, தாறு போட்டிருக்கும் வாழை, காய்த்திருக்கும் பாக்கு , மணக்கும் மஞ்சள், பல்வேறு இன மா மரங்கள் , குலை குலையாகத் தொங்கும் காய்களையுடைய பனை மரங்கள், கிழங்கினையுடைய சேப்பஞ்செடிகள் மற்றும் முளைத்திருக்கும் இஞ்சிச் செடிகளும் காணப்படும்.
சொற்பொருள் விளக்கம்
விளைவு – விளைதல், அறா- நீங்காத, வியன்- அகன்ற , கழனி- வயல், கார்க்கரும்பு-கருத்த முற்றிய கரும்பு. கமழ்- மணம், ஆலை- கரும்புச் சாற்றினைப் பாகாகக் காய்ச்சுகின்ற ஆலை, தீத்தெறுவின்- தீச்சுடுதலால், கவின் – அழகு, வாடி- உலர்ந்து, பொலிவிழந்து, நீர்ச்செறுவின் –நீருடைய வயல் , நீள் – நீண்ட , ஆங்கண் – அவ்விடத்து, காகண் செந்நெல் கதிர் காய் – காய்த்த செந்நெல்லின் கதிர் , அருந்து-மேய்ந்து , தின்று , மோட்டு எருமை- பெருத்த வயிற்றையுடைய எருமை மாடு, முழுக்குழவி – எருமையின் முதிர்ந்த கன்று, கூட்டு நிழல்- நெற்கூட்டின் நிழலில் , துயில்-தூக்கம் ,வதியும் – விலங்கு முதலிய தங்குமிடத்தில் தங்குதல், கோள் தெங்கின் – குலைகளையுடைய தென்னை மரங்கள், குலை வாழை – தாறுகளைக் கொண்ட வாழை மரங்களும், காய்க் கமுகின் – காய்களையுடைய பாக்கு மரங்கள் , கமழ் மஞ்சள் – மணம் கமழும் மஞ்சள், இன மாவின் – பல்வேறு இன மரங்கள், முதற்சேம்பின்- முதற்கிழங்கு வந்த சேப்பஞ் செடிகள், முளை இஞ்சி- முளைத்திருக்கும் இஞ்சி செடிகள்.
(1-7 வரிகளிலே காவிரியாற்றின் சிறப்பினையும் , 8-19 வரிகளிலே, காவிரியாறு பாய்வதால் வளமோடு காணப்படும் சோழநாட்டின் நில வளத்தையும் குறிப்பிட்டுள்ளார். இனி வரும் 20- 218 வரிகள் வரையிலும் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமைகளைப் பகர்ந்துள்ளார். பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணைப் பாடல் என்பதே பட்டினப்பாலை. ஆதலின் , காவிரிப் பூம்பட்டினத்துச் சிறப்புகளே பாட்டில் 199 வரிகள் இடம் பெற்றுள்ளன.)
காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு
அகல் நகர் வியன் முற்றத்துச்
சுடர் நுதல் மட நோக்கின்
நேர்இழை மகளிர் உணங்கு உணாக்கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்
விலங்குபகை அல்லது கலங்குபகை அறியா
கொழும் பல்குடிச் செழும்பாக்கத்துக்(20-27)
(க.ரை) ஒளி பொருந்திய நெற்றியும் ,மென்மையான பார்வையும் நேர்த்தியாகச் செய்யப்பட்ட அணிகலன்களையும் அணிந்துள்ள மகளிர், அகன்ற வீட்டின் பரந்த முற்றத்தில் உலர்த்தியிருக்கும் உணவுப் பொருள்களைத் தின்ன வரும் கோழிகளை விரட்ட, வளைந்த அடிப்பாகத்தைக் கொண்ட கனத்த குழையினை (காதணி) எறிவர். அக்குழை , பொன்னாலான அணிகலன்களைக் கால்களிலே அணிந்துள்ள சிறுவர், குதிரையின்றி கையால் உருட்டும் மூன்று கால்களையுடைய சிறுதேரினை முன் செல்லவிடாமல் தடுக்கும். இவ்வாறு தடைகளாக வரும் பகையே அன்றி வேறு கலக்கமுறுவதற்குக் காரணமான பகையை அறியாத காவிரிப்பூம்பட்டினம். இக்காவிரிப்பூம்பட்டினம் செல்வம் நிறைந்த, பல இனத்து மக்களும் சேர்ந்து வாழ்கின்ற செழிப்பான கடற்கரையை ஒட்டிய ஊர் (பாக்கம்)
சொற்பொருள் விளக்கம்.
அகல்நகர்- அகன்ற வீடு , வியன் முற்றம் – பரந்த முற்றம், சுடர் நுதல் –ஒளி வீசும் நெற்றி, மடநோக்கின்- மென்மையான பார்வை, நேரிழை- நேர்த்தியாகச் செய்யப்பட்ட அணிகலன், மகளிர்- பெண்கள், உணங்கு – வெயிலில் உலர்த்தும் உணா- உணவுப்பொருட்கள், கவரும்- தின்னவரும் , கோழி-கோழி , எறிந்த –வீசிய , கொடுங்கால்- வளைந்த அடிப்பகுதி, கனங்குழை- கனமான குழை (மகளிர் காதணி), பொற்கால் – பொன்னால் செய்த அணிகலன்களை அணிந்துள்ள கால், புதல்வர் – சிறுவர், மகன் ,புரவி இன்று- குதிரை இல்லாது, உருட்டும்- உருட்டிச்செல்லும், முக்கால்- மூன்று கால்கள் , சிறு தேர்- சிறிய தேர், முன் வழி- முன்னால் செல்லும் வழி, விலக்கும்- தடுக்கும், விலங்கு- தடை, பகை அல்லது –பகை அன்றி, கலங்கு பகை- கலக்கம் கொள்ளும் பகை, அறியா – அறியாத , கொழும் – செல்வச் செழிப்பு, பல்குடி- பல்வேறு இன மக்கள் , செழும் - செழிப்பான, பாக்கம்- கடற்கரை ஊர்.
காவிரிப்பூம்பட்டினத்துத் தோட்டங்கள்,தோப்புகள் , பூஞ்சோலைகள்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி
பணைநிலைப் புரவியின் அணைமுதல் பிணிக்கும்
கழிசூழ் படப்பை, கலியாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை (28-33)
(க,ரை)பெரிய சோழநாட்டிலே இருக்கின்ற சிறிய பல ஊர்களுக்கும் சென்று ,வெள்ளை நிற உப்பின் விலையைக் கூறி,நெல்லைப் பெற்று வந்த வலிமை வாய்ந்த படகுகளைப்,பந்தியில் (குதிரைச்சாலையில்) குதிரைகளைக் கட்டுத்தறியில் கட்டியிருப்பது போல உப்பங்கழி சார்ந்த இடங்களின் முன்பகுதியில் கட்டியிருப்பர். இத்தகைய உப்பங்கழிகள் சூழ்ந்த தோட்டங்களும், மகிழ்ச்சியான புது வருவாயினைத் தருகின்ற மரங்கள் நிறைந்த தோப்புகளும், அவற்றின் பக்கத்திலே பூஞ்சோலைகளையும் உடையது காவிரிப்பூம்பட்டினம்.
சொற்பொருள் விளக்கம்
குறும்பல்லூர் – சிறிய பல ஊர்கள் , நெடும் – நீண்ட , பரந்த,. சோணாட்டு- சோழ நாடு, வெள்ளை உப்பின் – வெள்ளை நிறத்திலே இருக்கின்ற உப்பின் , கொள்ளை – விலை , சாற்றி- கூறி , நெல்லொடு வந்த – நெல்லைப் பெற்று வந்த ,வல்வாய்-வலிமை வாய்ந்த ,பஃறி- படகு, பணைநிலை- பந்தியிலே நிற்கும், குதிரைச்சாலையிலே நிற்கும், புரவியின் – குதிரையினைப் போல ,அணை-உப்பங்கழியைச் சார்ந்திருக்கும் பகுதி, முதல் பிணிக்கும் – முன் பகுதியில் கட்டப்பட்டிருக்கும், கழி சூழ் படப்பை- உப்பங்கழி சூழ்ந்த தோட்டங்கள்,கலியாணர் – மகிழ்ச்சியான புது வருவாய், பொழில்- தோப்பு, (பழமரங்கள் நிறைந்த சோலை), புறவின் – பக்கத்தில் , பூந்தண்டலை- பூஞ்சோலைகள்.

கோயிலும் பொய்கையும், ஏரியும்
மழை நீங்கிய மா விசும்பில்
மதி சேர்ந்த மகவெண்மீன்
உரு கெழு திறல் உயர் கோட்டத்து
முருகு அமர் பூ முரண் கிடக்கை
வரிஅணி சுடர் வான் பொய்கை,
இரு காமத்து இணை ஏரி (34-39)

(க.ரை) மழை பெய்து ஒய்ந்த பெரிய வானத்தில் சந்திரனைச் சேர்ந்திருக்கும் மகம் என்ற வெண்ணிற நட்சத்திரத்தினைப் போன்ற வடிவமும் நிறமும் வலிமையும் வாய்ந்த உயர்ந்த கோயிலையும் அதனைச் சார்ந்து பல வண்ண மலர்களும் ஒருங்கே பூத்துக்கிடக்கும் நிறமும் அழகும் நிறைந்து ஒளி வீசும் உயர்ந்த கரையினையுடைய பொய்கையினையும் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் வேண்டுவோர் மூழ்கிக் குளிக்கும் இரண்டு ஏரிகளையும் உடையது காவிரிப்பூம்பட்டினம்.
சொற்பொருள் விளக்கம்
மழை நீங்கிய- மழை பெய்து ஓய்ந்த, மா விசும்பின் –பெரிய வானத்தில் ,மதி சேர்ந்த – திங்களைச் சேர்ந்த, மக வெண்மீன் – மகம் என்ற வெண்ணிற விண்மீன், உருகெழு திறல் – வடிவும், நிறமும் , வலிமையும், உயர் கோட்டத்து- உயர்ந்த கோட்டத்து,(கோட்டம் + அத்து , கோட்டம்-கோவிலும் , அத்து – சார்ந்து) , முருகு – அழகு, அமர் – விருப்பம், பூ முரண் கிடக்கை- பல்வேறு பூக்களும் ஒருங்கே கிடக்கும் , வரி – நிறம், அணி- அழகு, சுடர் – ஒளி வீசும் , வான் பொய்கை- உயர்ந்த கரையினையுடைய பொய்கை, இரு காமத்து- இம்மை , மறுமை இன்பம் , இணை ஏரி – இரண்டு ஏரிகள்.
காவிரிப்பூம்பட்டினத்து அட்டிற்சாலைகள்
புலிப் பொறி போர் கதவின்
திருத் துஞ்சும் திண்காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு வாக்கிய கொழுங் கஞ்சி
யாறு போலப் பரந்து ஒழுகி
ஏறு பொரச் சேறு ஆகி
தேர் ஓடத் துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல
வேறு பட்ட வினை ஓவத்து
வெண்கோயில் மாசு ஊட்டும். (40-50)
(க.ரை) காவிரிப்பூம்பட்டினத்தின் புகழ் நிலைப்பதற்கும், சோழ நாட்டினைப் பற்றிய புகழ் மொழி எங்கும் பரவி வளர்வதற்கும், புலிச்சின்னம் பொறிக்கப்பட்டு, செல்வம் தங்குகின்ற இரட்டைக் கதவுகளைக் கொண்டதாக வலிமையான பாதுகாவலோடு அகன்ற அட்டிற் சாலைகள் அமைந்திருந்தன. இவ்வுணவுச் சாலைகளில் சோற்றினைச் சமைத்து வடித்த கஞ்சியானது, ஆறு போலப் பரந்து காவிரிப்பூம்பட்டனத்துத் தெருக்களில் ஓட, அங்கே காளைகள் ஒன்றொடொன்று சண்டையிட சோற்றுக் கஞ்சி சேறானது- அச்சேற்றின் மீது தேர்கள் ஓட , சேறு புழுதியாகி எங்கும் பரவியது. அப்புழுதி படிந்ததால், பல்வேறு வண்ணங்களால் வேலைப்பாடமைய ஓவியம் தீட்டப்பட்டு வெண்ணிறமாக இருந்த அரண்மனை, புழுதியினைத் தன் மேல் வாரி இறைத்துக் கொண்ட யானையைப் போல் மாசு படிந்து காட்சியளித்தது.
சொற்பொருள் விளக்கம்
புலிப்பொறி – புலிச்சின்னம் (சோழர்களின் சின்னம்) பொறிக்கப்பட்டு, போர்க் கதவின்‘- பொருன்துகின்ற இரண்டு கதவுகள், திருத்துஞ்சும் – செல்வம் தங்குகின்ற , செல்வம் உறைந்துள்ள, திண் காப்பின் – வலிமையான பாதுகாவல்,புகழ் நிலைஇய – புகழ் நிலைக்கவும் ,மொழி வளரவும் – புகழ் மொழி பரவி வளரவும், அறம் நிலைஇய – அறம் நிலைக்கவும் , அகன் அட்டில் – அகன்ற அட்டிற்சாலைகள், சோறு வாக்கிய – சோற்றினைச் சமைத்த, கொழுங்கஞ்சி (வடித்த) வளப்பமானசத்துள்ள கஞ்சி, ஆறு போலப் பரந்து – ஆற்றைப் போலப் பரந்து , ஒழுகி – தெருவிலே ஓட, ஏறு பொரச் சேறு ஆகி- (அத்தெருவிலே வந்த ) எருதுகள் ஒன்றொடொன்று சண்டையிட , அந்தக் கஞ்சி சேறாக ஆனது. தேர் ஓட – அச்சேற்றின் மீது தேர் ஓட , துகள் கெழுமி – புழுதியாக நிறைந்து, நீறு ஆடியகளிறு போல- புழுதியினைத் தன்மேல் வாரி இறைத்த களிறு போல, வேறுபட்ட -பல்வேறுபட்ட வண்ணங்களால் , வினை- வேலைப்பாடமைய, தொழிற்றிறம், ஓவத்து – ஓவியங்கள் நிறைந்த , வெண்கோயில்- வெண்மையான அரண்மனை, மாசு ஊட்டும்- மாசு ஊட்டப்பட்டிருக்கும் , சேற்றுத் துகளாகிய புழுதியினை ஏற்றிருக்கும்.

மாட்டுக் கொட்டில்

தண்கேணி தகை முற்றத்துப்
பகட்டு எருத்தின் பலசாலை(51-52)
(க.ரை) குளிர்ந்த நீரினையுடைய கிணற்றினை உள்ளடக்கிய முற்றத்தில் , பெரிய எருதுகள் கட்டப்பட்டிருக்கும் பல மாட்டுக் கொட்டில்களும் இருந்தன.
சொற்பொருள் விளக்கம்
தன்கேணி- குளிர்ந்த நீருள்ள கிணறு , தகை- உள்ளடக்கிய, முற்றத்து- முற்றத்தில் , பகட்டு எருத்தின்- வலிமையான எருதுகள், (பகட்டு மார்பின் ,புறம்,88) பல சாலை- பல கொட்டில்கள்(மாடு கட்டும் இடம்)

காவிரிப்பூம்பட்டினத்துத் தவப்பள்ளியும்,வேள்விச்சாலையும்
தவப்பள்ளித் தாழ் காவின்
அவிர் சடைமுனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇ குயில் தம்
மாயிரும் பெடையோடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் (53-58)

(க.ரை) காவிரிப்பூம்பட்டினத்தில் சமணர்களும் பௌத்தர்களும் தவம் செய்யும் பள்ளிகள் இருந்தன. தாழ்ந்த மலர்ங்கள் அடர்ந்த சோலைகளில் விரிந்த சடைமுடியினையுடைய முனிவர்கள், நெருப்பினை வளர்த்து ,வேள்வி செய்தனர். அவ்வேள்வித் தீயினின்றும் உண்டாகிய நறும்புகையை வெறுத்து மரங்களில் இருந்த ஆண்குயில் தனது அழகிய பெண்குயிலோடு அவ்விடத்தை விட்டு நீங்கி, பூதம் காவல் காக்கும் ஒருவரும் எளிதில் புக முடியாத பாதுகாவலையுடைய நகரத்திற்குச் சென்று , அங்கே கற்களை உணவாக உண்டு வாழும் புறாக்களுடன் தாமும் ஒதுக்கிடத்தில் தங்கும்.
சொற்பொருள் விளக்கம்
தவப்பள்ளி- சமணர், பௌத்தர் தவம் செய்யும் இடம் (பள்ளி), தாழ் காவின் – தாழ்ந்து வளர்ந்த மரங்கள் செறிந்த சோலையில், அவிர் – விரிந்த , சடை முனிவர் – சடையினை உடைய முனிவர், அங்கி- நெருப்பு, வேட்கும் – வேள்வியும் செய்யும், ஆவுதி – வேள்வி , நறும்புகை- நறுமணப் புகை , முனைஇ – வெறுத்து , குயில்தம்- ஆண் குயில் தனது, மா இரும் – அழகிய கரிய , (மா- அழகு, இரும் கருமை) இரியல் – வேற்றிடம் , போகி – சென்று , பூதம் காக்கும்- பூதம் காவல் காக்கின்ற , புகல் அரும் – எளிதில் புக முடியாத , கடி நகர் – பாதுகாவலையுடைய நகர், தூதுணம் – தூது+உண்+கூழாங்கல்லை உண்ணும் புறா வகை (திவாகர நிகண்டு), புறாவோடு- புறாவோடு , துச்சில் – ஒதுக்கிடம் , சேக்கும் – தங்கும்,
(காவிரிப்பூம்பட்டினம் பூதங்களாலும காக்கப்படும் சிறப்புடையது என்பதை,
தேவர்க் கோமான் ஏவலில் போந்த
காவல் பூதத்துக் கடையெழு பீடிகை
(சிலம்பு.5, 66-67)
என்ற சிலப்பதிகார வரிகளால் அறியலாம்)

விளையாட்டுக் களத்தில் மறவர்களின் மற்போரும் வாட்போரும்

முது மரத்த முரண் களரி
வரி மணல் அகன் திட்டை
இருங் கிளை இனன் ஒக்கல்
கருந் தொழில் கலிமாக்கள்
கடல் இறவின் சூடு தின்றும்
வயல் ஆமை புழுக்கு உண்டும்
வறள் அடும்பின் மலர் மலைந்தும்
புனல் ஆம்பல் பூச் சூடியும்
நீல்நிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாள்மீன் விராய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇ
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி
பெருஞ் சினத்தான் புறங் கொடாது
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்
எல் எறியும் கவண் வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தை (59-74)
(க,ரை) புகார் நதரில் , வரி வரியாக மணல் பரந்த அகன்ற மேட்டுப் பகுதியில் உள்ள பழைமையான மரத்தின் நிழலில் , மறவர்கள் தம் வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் இருந்தது. அவ்விடத்து மறவர்களின் பெரிய உறவினர்களும், இனச் சுற்றத்தினரும் கூடியிருந்தனர். வலிமையான போர்த்தொழிலில் வல்ல போர் மறவர்கள், கடல் இறாலினைச் சுட்டுத் தின்றனர். வயலிலே கிடைத்த ஆமையினை வேக வைத்து உண்டனர். மணலில் மலர்ந்துள்ள அடப்பம்பூவினைச் சூடினர், நீரில் பூத்த ஆம்பல் பூக்களைப் பறித்துத் தலையில் அணிந்து கொண்டனர். நீல நிறமான அகன்ற வானத்தில் வலமாக எழுந்து திரியும் நாள்மீனாகிய சூரியனோடு பொருந்திய கோள்கள் போல அகன்ற இடத்தையுடைய பொது மன்றத்தில் போர் புரிவோரும் , காண்போருமாகிய மக்கள் ஒன்று கூடி இருந்தனர். கையினாலும், படைக்கலத்தினாலும் ஒருவருக்கொருவர் பின் வாங்காது ,போட்டிப் போட்டுக் கொண்டு தம் மிகுந்த போர் வலிமையைக் காட்டினர். மேலும் வலிமையைக் காட்ட எண்ணி, கவணில் கல்லை ஏற்றி எறிந்தனர். இவர்கள் எறிகின்ற கல்லிற்கு அஞ்சி பறவைகள், சொரசொரப்பான பனைமரங்களை விட்டு வேற்றிடத்திற்குச் சென்றன.
சொற்பொருள் விளக்கம்
முது மரத்த – பழைமையான மரத்தையுடைய , முரண் களரி – மறவர்கள் தமது வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் , பரிமணல் – காற்றால் அறலாக (வரி வரியாக) அமைந்த மணல், அகன் திட்டை- அகன்ற மேட்டுப்பகுதியில், இருங்கிளை – பெரிய அளவில் உறவினர்கள், இனன் ஒக்கல்- இனச்சுற்றத்தினர், கருந்தொழில் – வலிய தொழில் (போர்த் தொழில் ), கலி மாக்கள் – செருக்குடைய போர் மறவர்கள் (விடையாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கும் மறவர்கள்) கடல் இறவின் - கடலில் கிடைக்கும் இறால் மீனின் , சூடு தின்ஷிம் சுட்டுத் தின்றும்,வயல் ஆமை – வயலிலே உள்ள ஆமை , புழுக்கல் உண்டும் – அவித்து உண்டும், வறள் அடம்பின் – மணலில் பூத்துள்ள அடப்பம்பூ, மலர் மலைந்தும் – மலரினைத் தலையில் சூடியும் , புனல் ஆம்பல் – நீரில் வளரும் ஆம்பல் , பூச்சூடியும் – பூவினை அணிந்து கொண்டும், நீல் நிற விசும்பின் – நீல நிறமுள்ள வானத்தில் , வலன் ஏர்பு திரிதரு – வலமாக எழுந்து உலவுகின்ற , நாள் மீன் விராய – நாள்மீனாகிய சூரியனுடன் பொருந்திய, கோள்மீன் போல- கோள்கள் போல , மலர்தலை மன்றத்து- அகன்ற இடத்தையுடைய பொது மன்றத்து, பலருடன் குழீஇ – பலருடன் கூடி, கையினும் – கைகளாலும் , கலத்தினும் – படைக்கலன்களாலும், மெய் உறத் தீண்டி – உடலோடு உடல் பொருத மோதியும் , பெருஞ்சினத்தால் – மிக்க சினத்தால், புறக்கொடாது- ஒருவருக்கொருவர் பின் வாங்காமல், இருஞ்செருவில் – பெரிய சண்டையில் ,வீரர்களுக்குள் நடக்கும் பெரும் போரில், இகல் – போர் , பகை, மொய்ம்பினோர் – வலிமை வாய்ந்தவர், கவண் எறியும் – கவணால் எறிகின்ற , கல் வெரீஇ – கல்லுக்கு அஞ்சி, புள் – பறவைகள் ,இரியும் – விட்டுப் போகும் , விரைந்து செல்லும்.
காவிரிப்பூம்பட்டினத்துச் சேரிப்பகுதி
பறழ்ப் பன்றி பல் கோழி
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாட (75-77)
(க.ரை ) குட்டிகளோடு பன்றிகளும், பல வகையான கோழிகளும் உறைக் கிணறுகளும் இருக்கின்ற பட்டினத்துப் புறத்தே உள்ள சேரிப்பகுதியிலே, செம்மறி ஆட்டுக் கிடாய்களுடன், கௌதாரிப் பறவைகளும் விளையாடிக் கொண்டிருக்கும்.
சொற்பொருள் விளக்கம்
பறழ்ப் பன்றி – குட்டிகளோடு பன்றியும், பல்கோழி – பலவகையான கோழி , உறைக் கிணற்று – உறையினை உடையதாக கிணறு, புறஞ்சேரி – பட்டினத்திற்குப் புறத்தே உள்ள சேரிப்பகுதி (தாழ்த்தப்பட் டோர் வாழும் பகுதி) , ஏழகம் – ஆடு , தகரொடு – கடாய்களோடு (ஆண் ஆடு) சிவல் – கௌதாரிப் பறவை, விளையாட- விளையாட, (பன்றி, கோழி, ஆடு , கௌதாரி என்று குறிப்பிடுவதைக் கொண்டே பட்டினத்திற்கு வெளியே உள்ள , கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்பதை அறியலாம் இங்கே வாழும் மக்கள் குடிநீருக்காக ஊற்று தோண்டி அதில் உறையினைப் பதித்துள்ளனர். ஊற்றின் அடிப்பழுதியிலிருந்து மேல் மட்டம் வரையிலும் வட்டமாக செய்யப்பட்ட உறையினைப் பொருத்தியிருக்கும் கிணறுகளையே உறைக்கிணறு என்பர். இன்றும் தமிழகத்தில் இவ்வகை கிணறுகளைக் காணலாம்.)
பரதவர்களின் இருப்பிடம்
கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
நடுகல்லின் அரண் போல
நெடுந்தூண்டிலில் காழ் சேர்த்திய
குறுங் கூரை குடிநாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில் (78-83)
(க.ரை) இறந்த வீரர்களின் நினைவாக நடப்பட்டிருக்கும் நடுகல்லுக்குக் கேடயங்களை வரிசையாக வைத்து வேலை ஊன்றி அமைத்திருக்கும் அரண் போல, நீண்ட மீன் தூண்டில் கோலினைச் சார்த்தி வேலி அமைக்கப்பட்டிருக்கும் குறுகிய கூரையினையுடைய குடிசை காணப்படும். இதன் நடுவில் நிலவினைச் சேர்ந்திருக்கும் இருளைப் போல, வலை உலர்ந்து கொண்டிருக்கும் மணல் முற்றத்தினை உடையது பரதவரின் இருப்பிடம்.
சொற்பொருள் விளக்கம்
கிடுகு நிரைத்து – கேடயங்களை வரிசையாக வைத்து, எஃகு ஊன்றி – வேல்களை நட்டு, நடுகல்லின் – வீரர்களின் நினைவாக நடப்பட்டிருக்கும் நடுகல்லுக்கு, அரண் போல – வேலி போல , நெடுந்தூண்டிலின் - நீண்ட மீன் தூண்டிலின் , காழ் சேர்த்திய – கோலினைச் சார்த்தியிருக்கும், குறுங்கூரை, சிறிய கூரையினையுடைய, குடிநாப்பண் – குடிசையின் நடுவில் , நிலவு அடைந்த இருள்- நிலவைச் சேர்ந்திருக்கும் களங்கமாகிய இருளைப் போல, வலை உணங்கும்- வலை காய்ந்து கொண்டிருக்கும், மணல் முன்றில் – மணல் நிறைந்த வீட்டின் முற்றம் (முன்பகுதி)

பரதவர்களின் வழிபாடும் விளையாட்டும்
வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த
வெண் கூதாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும்
புன்தலை இரும் பரதவர்
பைந் தழை மா மகளிரொடு
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது
உவவு மடிந்து உண்டு ஆடியும் (84-93)
(க.ரை) பரதவர் , விழுதினையுடைய தாழையின் தாள்களின் அடிப்பகுதியில் வளர்ந்திருக்கும் வெண்டாளியின் குளிர்ச்சியான மலர்களால் கட்டப்பட்ட மாலையினை அணிந்திருந்தனர். சினையான சுறாமீனின் கொம்பினை நட்டு, அதில் தம் நிலத்து தெய்வமாகிய வருணனைத் தங்கச்செய்து, அத்தெய்வத்திற்குப் படைத்த மடலோடு கூடிய தாழை மலரைத் தாம் சூடினர். சொர சொரப்பான பனை மரத்திலிருந்து இறக்கிய கள்ளைப் பருகினர். எண்ணெய் தடவாத தலைமயிரும், கரிய நிறமுமுடைய பரதவர்,முழு நிலா நாளில் ஊக்கம் குறைந்து, கருமையான குளிர்ந்த கடலில் மீன் வேட்டைக்குச் செல்லாமல், பசுமையான தழை ஆடையினை உடுத்த தம் பெண்களோடு தாம் விரும்பும் உணவினை உண்டு விளையாடினர்.
சொற்பொருள் விளக்கம்.
வீழ்த்தாழை – விழுதினையுடைய தாழை , தாள் – அடிப்பகுதி, தாழ்ந்த – அடிப்பகுதி, வெண்கூதாளத்து – வெண்கூதாளத்தின், தண் பூங்கோதையர் – குளிர்ந்த பூ மாலையினை அணிந்தவர், சினைச் சுறவின் – சினையாக இருக்கும் சுறா மீனின் ,கோடு நட்டு – கொம்பினை நட்டு , மனை சேர்த்திய – சுறா மீனின் கொம்பினைத் தெய்வம் தங்கும் இடமாகச் செய்து , வல் அணங்கினோன் – வலிய கடல் தெய்வமாகிய வருணனுக்குப் (படைத்து), மடல் தாழை – மடலையுடைய தாழை , மலர் மலைந்தும் – மலரினைச் சூடியும், பிணர்ப் – சொர சொரப்பான, பெண்ணை – பனை மரத்திலிருந்து (எடுத்த) பிழி மாந்தியும் – கள்ளைப் பருகியும் , பைந்தழை – பசுமையான தழையினை, மா மகளிரொடு – கருத்த மகளிரொடு , பாய் இரும் பனிக்கடல் – பரந்த கருமையான குளிர்ச்சியான கடல் , வேட்டம் செல்லாது – மீன் பிடித்தலுக்குச் செல்லாது, உவவு மடிந்து – முழுமதிநாளிலே ஊக்கம் குறைந்து, உண்டு ஆடியும் – தாம் விரும்பியதை உண்டு ஆடினர்.

சங்கமுக நீராடலும் , பகல் விளையாட்டும்
புலவுமணல் பூங்கானல்
மாமலை அணைந்த கொண்மூ போலவும்,
தேறுநீர்ப் புணரியோடு யாறுதலை மணக்கும்
மலி ஓதத்து ஒலிகடல்
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும்
அலவன் ஆட்டியும் உரவுத்திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
அகலாக் காதலொடு பகல் விளையாடிப்
பெறற்கு அரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூமலி பெருந்துறை (94-105)
(க.ரை) புலால் நாறும் மணலையும், பூக்களையும் கொண்ட கடற்கரையிலே, பெரிய மலையைச் சேர்ந்த மேகத்தைப் போலவும், தாயின் மார்பினைத் தழுவிய குழந்தையைப் போலவும் , தெளிந்த நீரினையுடைய கடலோடு,காவிரியாறு கலக்கின்ற இடமாகிய சங்கமுகத்துறையில் (கடலும் ஆறும் கலக்குமிடம்) அலைகளின் ஒலி மிகுந்து காணப்பட்டது. இச்சங்கமுகத்தில் தீவினை நீங்க கடலாடினர். கடலாடியதால் மேனியில் படிந்த உப்பு நீங்குவதற்காக , பின் பாவிரியாற்றிலே குளித்தனர். நண்டுகளைப் பிடித்து ஆட்டியும், ஒலி மிகுந்த அலைகளிலே விளையாடியும்,மணலிலே பாவை செய்தும் ,ஐம்புலன்களால் பெறுகின்ற இன்பம் அனைத்தையும் நுகர்ந்தனர். பின்பும் அவ்விடத்தை விட்டு நீங்குவதற்கு விருப்பமின்றி, விருப்பத்துடன் பகற்பொழுதெல்லாம் விளையாடினர். நீர்வளம் என்றும் பொய்க்காததால் , பூக்கள் நிறைந்து காணப்படும் காவிரிப்பூம்பட்டினத்துச் சங்கமுகத்துறை, பெறுவதற்கரிய தொன்மையான சிறப்பினையுடைய சொர்க்கத்தை ஒத்து விளங்கியது.
சொற்பொருள் விளக்கம்
புலவு மணல் – புலால் நாற்றம் வீசும் மணல்,பூங்கானல் – பூக்களைக் கொண்ட கடற்கரை,மாமலை அணைந்த – பெரிய மலையைச் சேர்ந்த , கொண்மூப் போலவும்- மேகத்தைப் போலவும், தாய் முலை தழுவிய – தாயின் மார்பைத் தழுவிய , குழவி போலவும் – குழந்தையைப் போலவும், தேறுநீர் – தெளிந்த நீர் , புணரியொடு – கடலோடு , யாறுதலை மணக்கும் – காவிரியாறு ஒன்று கூடும், காவிரியாறு ஒன்றுசேரும் , மலி ஓதத்து – ஒலி மிகுந்து காணப்படும் அலை ஒலி கடல் – ஒலிகிகின்ற சங்கமுகத்துறை (கடலும் ஆறும் சங்கமிக்கும இடம்) தீது நீங்க – தீ வினை நீங்க , கடலாடியும் -கடலிலே குளித்தும், மாசுபோக – கடல் நீரில் குளித்த உப்பு நீங்க, புனல் படிந்தும் – காவிரி நீரிலே குளித்தும், அலவன் ஆட்டியும் – நண்டுகளைப் பிடித்து அலைந்தும், உரவுத்திரை உழக்கியும் – ஒலி மிகுந்த அலைகளிலே விளையாடியும்,பாவை சூழ்ந்தும் –கடற்கரை மணலிலே பாவை (மணல் பொம்மை ) செய்தும், பல்பொறி மருண்டும்- ஐம்புலன்களால் பெறுகின்ற இன்பம் அனைத்தையும் நுகர்ந்தும், அகலாக் காதலொடு – நீங்காத விருப்பத்தோடு , பகல் விளையாடி – பகற்பொழுதெல்லாம் விளையாடி , பெறற்கரும் – பெறுவதற்கு அரிதான , தொல்சீர் – தொன்மையான சிறப்புடைய ,துறக்கம் ஏய்க்கும் – சுவர்க்கத்தை ஒத்திருக்கும், பொய்யா மரபின்- நீர் வளம் பொய்த்துப் போகாத மரபினையுடைய ,பூமலி பெருந்துறை – பூக்கள் நிறைந்து காணப்படும் பெரிய காவிரிப்பூம்பட்டினம்.
காவிரிப் பூம்பட்டினத்து இரவு நேர நிகழ்வுகள்
துணைப் புணர்ந்த மட மங்கையர்
பட்டு நீக்கித் துகில் உடுத்தும்
மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மலையவும்
நெடுங்கால் மாடத்து ஒள்எரி நோக்கிக்
கொடுந் திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும்
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
வெண் நிலவின் பயன் துய்த்தும்
கண் அடைஇய கடைக் கங்குலான் (106- 115)

(க.ரை) காவிரிப்பூம்பட்டினத்துச் செல்வச் செழிப்பு மிகுந்த நெடிய தூண்களையுடைய மாடி வீட்டில் வாழ்ந்த மங்கையர், இரவு நேரத்தில் பாடல்களைக் கேட்டும், நாடகங்களை விரும்பிப் பார்த்தும், வெண்ணிலவின் காட்சி இன்பத்தை நுகர்ந்தும் மகிழ்ந்தனர். தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் ,தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் கள்ளினை அருந்தாது மட்டினைக் குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர் . மகளிர் அணியும் கோதையினை(மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் . இவ்வாறு இன்பம் நுகர்ந்து , இரவின் கடையாமத்திலே கண் அயர்ந்தனர். இந்த இரவினிலே, மீன் பிடிக்கச் சென்ற வளைந்த கட்டுமரங்களையுடைய பரதவர், நெடிய தூண்களையுடைய வீட்டின் மாடங்களிலே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒளி பொருந்திய விளக்குகளை எண்ணிப்பார்ப்பர் . (மீன் பிடிக்கச் சென்ற பரதவர், மாடங்களில் ஏற்றி வைத்த விளக்குகளில் அணைந்தன தவிர அணையாமல் எரியும் சுடர்களை எண்ணி இரவு நேரத்தைக் கணக்கிட்டுக் கரைக்குத் திரும்புவர் போலும்)
சொற்பொருள் விளக்கம்
துணைப்புணர்ந்த – கணவரைக் கூடின , மட மங்கையர் – இளம் பெண்கள் , பட்டு நீக்கி –பட்டாடையினை நீக்கி, துகில் உடுத்து – பருத்தி ஆடையினை இடுத்தி, மட்டு நீக்கி – கள்ளினைத் தவிர்த்து , மது மகிழ்ந்து – மதுவினை அருந்தி மகிழ்ந்தும், மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - கணவர் அணியும் (கோதை) மாலையினை சூடியும், மகளிர் கோதை மைந்தர் மலையவும் – மகளிர் அணியும் கோதையினை ஆடவர் சூடியும் ,நெடுங்கால்மாடத்து- நெடிய தூண்களையுடைய மாடி வீட்டில் ,ஒள்எரி நோக்கி – ஒளியுள்ள விளக்குகளை எண்ணுவதும் , பாடல் ஓர்ந்தும் – பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தும், நாடகம் நயந்தும் – நாடகங்களை விரும்பிப் பார்த்தும், வெண் நிலவின் பயன் துய்த்தும் – வெண்மையான நிலவின் பயன் துய்த்தும் – வெண்மையான நிலவின் காட்சி இன்பத்தை அனுபவித்தும் ,கண் அடைஇய – கண் உறங்குகின்ற , கடைக் கங்குலான்- இரவின் கடைசிப்பகுதி .
வரி வசூலிப்போர் தன்மை
மாஅ காவிரி மணம் கூட்டும்
தூஉ எக்கர்த் துயில் மடிந்து
வால் இணர் மடல்தாழை
வேல் ஆழிவியன் தெருவில்
நல் இறைவன் பொருள் காக்கும்
தொல்இசைத் தொழில் மாக்கள்
காய்சினத்த கதிர்ச் செல்வன்
தேர்பூண்ட மாஅபோல
வைகல் தொறும் அசைவு இன்றி
உல்கு செயக் குறை படாது(116-125)
(க.ரை) தொன்மையான புகழினையுடைய சுங்கம் வசூலிக்கும் தொழிலினைச் செய்வோர், பெரிய காவிரியாற்றின் நறுமணம் பரப்பும் தூய மணற்பரப்பில் சிறிது நேரம் தூங்குவர். பின்னர் வெண்மையான பூங்கொத்துகளையும்,மடல்களையுமுடைய தாழை நிறைந்த கடற்கரைக்கு அருகிலுள்ள அகன்ற தெருவில் ,நல்ல அரசனின் பொருள்களைப் பிறர் கவராமல் பாதுகாப்பர்.வெம்மையான கதில்களைக் கொண்ட சூரியனின் தேரிலே பூட்டப்பட்ட குதிரைகளைப் போல, நாள்தோறும் சோம்பலில்லாமல் குறைவின்றி சுங்கம் வாங்குவர்.
சொற்பொருள் விளக்கம்
மாஅ காவிரி – பெரிய காவிரியாறு ,மணம் கூட்டும் – பூக்களைக் கொண்டு வந்து நறுமணம் பரப்பும் , தூஉ எக்கர் – தூய மணல் பரப்பில் துயில் மடிந்து – (சுங்கம் வாங்குவோர்) தூங்கிக் கிடந்து, வால் இணர்- வெண்மையான பூங்கொத்துகளையும் , மடல் தாழை - மடல்களையுடைய தாழை, வேலாழி – கடற்கரை , வியன் தெருவில் – அகன்ற தெருவில் ,நல் இறைவன் – நல்ல மன்னனின், பொருள் காக்கும் – பொருட்களைக் காக்கும்,
(மன்னனின் பொருளாவது
உறுபொருளும் உல்கு பொருளும் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் (குறள் 756)
உறுபொருள் – உடையாரில்லாமையால் கிடைக்கும் பொருள், உல்கு பொருள் – வரியாக வரும் பொருள் , ஒன்னார் தெறு பொருள் – பகைவரை வென்று கொள்ளும் பொருள் என்பார் திருவள்ளுவர்)
தொல் இசை – தொன்மையான புகழினையுடைய ,தொழில் மாக்கள் – வரி வசூலிப்போர் (சுங்கம் வாங்கும் தொழிலன்றியும் வேறெதுவும் அறியார். ஆதலினி மாக்கள் என்றார்) காய் சினத்த – சுடும் வெம்மையுடைய ,கதிர்ச் செல்வன் – கதிர்களை உடைய சூரியனது, தேர்பூண்ட – தேரிலே பூட்டப்பட்ட ,மாஅபோல – குதிரைகளைப் போல, வைகல் தொறும் – நாள்தொறும், அசைவு இன்றி – சோம்பல் இல்லாமல் , உல்கு செய – சுங்கம் வாங்க , குறைபடாது – குறையாது.
பல்பொருளும் குவிந்து கிடக்கும் காவிரிப்பூம்பட்டனத்துப் பண்டகசாலை
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல்பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல
நீரினின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியா பலபண்டம்
வரம்பு அறியாமை வந்து ஈண்டி
அருங்கடி பெருங்காப்பின்
வலிவுடை வல் அணங்கின் நோன்
புலிபொறித்து புறம் போக்கி
மதி நிறைந்த மலி பண்டம்
பொதிமூடைப் போர் ஏறி
மழை ஆடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்
கூர் உகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை
ஏழகத் தகரொடு உகளும் முன்றில் (126-141)

(க.ரை) மேகம் கடலிலே முகந்த நீரை மலையிலே மழையாகப் பொழிவதும், மலையில் பொழிந்த நீர் ஆறாகப் பெருகி கடலிலே போய்ச் சேருவதுமாகிய மழை பொழியும் காலத்தைப் போலக் , (பல நாடுகளிலிருந்து நீர் வழியாக ) கப்பலில் வந்த பொருட்களைக் கடலிலிருந்து கடற்கரையில் கொண்டு வந்து சேர்ப்பதும் , ( உள்நாட்டில் விளைந்த பொருட்களை) வெளிநாடுகளுக்கு அனுப்பும் பொருள்களைக் கப்பலில் பரப்புவதுமாக அளவிட்டு அறிய முடியாத பல பொருட்கள் பண்டகசாலையில் எல்லையின்றி வந்து குவிந்து கிடந்தன. பெருமையும் அச்சமும் , மிகுந்த காவலும் அமைந்த பண்டகசாலையில்,வரி கொடுக்காமல் மறைப்பவர்களுக்கு, அச்சம் தருபவராக இருக்கின்ற வலிமை வாய்ந்த சுங்கம் வாங்குவோர், பொருட்களின் மீது பெருமை பொருந்திய புலிச்சின்னத்தைப் பொறித்து, (பண்டகசாலையின் முற்றத்திற்கு) வெளியே அனுப்புவர். இவ்வாறு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த பண்டங்களும் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் பொருட்களுமாகப் பலவகைப் பொருட்களும் வரி செலுத்தப்பட்டு, பொதியப்பட்ட மூட்டைகளாகக் குவிக்கப்பட்டுள்ளன. மேகம் உலவிகின்ற பெருமை பொருந்திய பொதிகை மலையின் பக்க மலைகளிலே வருடை மான்கள் விளையாடுகின்ற காட்சி போலப் பண்டகசாலை முற்றத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள மூட்டைகளின் மீது கூர்மையான நகங்களையும் வளைந்த பாதத்தையுடைய ஆண் நாயும், செம்மறி ஆட்டுக் கிடாய்களும துள்ளிக் குதித்து விளையாடும்.இத்தகைய தன்மையினை உடையது பண்டகசாலையின் முற்றம்.
சொற்பொருள் விளக்கம்
வான் முகந்த நீர்- மேகம் கடலிலிருந்து மொண்ட நீர், மலை பொழியவும்- மலையிலே மழையாகப் பொழியவும் , மலை பொழிந்த நீர் – மலையிலே மழையாகப் பெய்த நீர், கடல் பரப்பவும் – (ஆறாகிக்) கடலிலே சென்று பரந்து விளங்கவும், மாரிபெய்யும் பருவம் போல – மழை பெய்யும் காலத்தைப் போன்று , நீரின்று நிலத்தேற்றவும் – நீர் வழியாக வெளிநாடுகளிலிருந்து கப்பலில் வந்தவற்றை நிலத்திலே இறக்குமதி செய்தும், நிலத்தினின்று நீர்ப் பரப்பவும் – உள் நாட்டிலே விளைந்த பொருட்களைக் கடல் வழியே வெளிநாடுகளுக்கு அனுப்ப மரக்கலங்களில் பரப்பி வைப்பதும், அளந்து அறியா – அளவிட்டு அறிய முடியாத , பல்பண்டம், - பலவகைப் பொருட்கள் , வரம்பு அறியாமை – எல்லை காண முடியாத அளவுக்கு , வந்து ஈண்டி – வந்து நிறைந்து, அருங்கடி – பெருமையும் அச்சமும் , பெருங்காப்பின் – பெரிய காவலமைந்த பண்டகசாலையில் , வலியுடை – வலிமை வாய்ந்த , வல் அணங்கின் – அச்சத்தைக் கொடுப்பவர் (வரி கொடாமல் இருப்போருக்கும், கள்வர்களுக்கும் அச்சத்தைத் தருபவர்.) நோன்- பெருமை, புலிப் பொறித்து – புலிச் சின்னத்தைப் பொறித்து (புலிச்சின்னம் சோழர்களுக்கு உரியது) , புறம் போக்கி – வரி வசூலிக்கப் பட்டது என்பதற்கு அடையாளமாகப் புலிச் சின்னத்தைப் பொறித்து வரி பெறுமிடத்திலிருந்து பண்டகசாலை முற்றத்திற்கு அனுப்பி, மதி நிறைந்த – மதிப்பிடப்பட்ட அளவுக்கதிகமான, மலி பண்டம் – பல்வேறு பொருட்களும் , பொதிமூடை – பொதிந்து மூடிக் கட்டப்பட்ட மூடை, போர் ஏறி – குவியலில் ஏறி ,மழையாடு சிமய – மேகம் தவழுகின்ற பொதிகை மலையில் (சிமயம் – பொதிகைமலை – சூடாமணி நிகண்டு), மால் வரைக் – பெருமை பொருந்திய மலையின் ,கவான் – பக்க மலைகளில், வரையாடு – மலையிலே விளையாடும் ,வருடைத் – வருடை இன மான்கள்,தோற்றம் போல – காட்சி போல , கூர் உகிர் ஞமலி – கூர்மையான நகங்களையுடைய நாய், கொடுந்தாள் – வளைந்த பாதம், ஏற்றை – ஆண் நாயானது, ஏழகத் தகரொடு – செம்மறி ஆட்டுக் கிடாய்களுடன், உகளும் – துள்ளிக் குதித்து விளையாடும் ,முன்றில் –

பண்டகசாலையின் முற்றம்.
மாளிகையின் அமைப்பு
குறுந்தொடை நெடும்படிக்கால்
கொடும்திண்ணைப் பல்தகைப்பின்
புழைவாயில் போகு இடைகழி
மழைதோயும் உயர் மாடத்துச்
விழா நீங்காத கடைவீதி
சேவடிச் செறிகுறங்கின்
பாசிழைப் பகட்டு அல்குல்
தூசுடைத் துகிர்மேனி
மயில் இயல் மான்நோக்கின்
கிளிமழலை மென்சாயலோர்
வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்கும்
காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
குழல் அகவ யாழ்முரல
முழவு அதிர முரசு இயம்ப
விழவுஅறா வியல் ஆவணத்து (142- 158)
(க.ரை) மேகத்தைத் தொடுகின்ற உயர்ந்த மாளிகைகளில், ஒன்றற்கொன்று நெருக்கமாக தொடர்ச்சியாக அமைந்த படிக்கட்டுகளைக் கொண்ட நீண்ட ஏணியினையுடைய சுற்றுத் திண்ணையும் பல தடுப்புகளும் பெரிய வாயில்களும், வாயிலிலிருந்து மாளிகைக்குச் செல்லும் நீண்ட உட்பகுதியும் அமைந்திருக்கும். அத்தகைய உயர்ந்த மாளிகையின் மேல் மாடத்தில் சிவந்த பாதங்களையும் ,நெருங்கிய தொடைகளையும் ,அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பொலிவுடன் விளங்கும் அடி வயிற்றினையும் , மெல்லிய ஆடை அணிந்த பவளம் போன்ற மேனியையும், மயிலின் தோற்றத்தையும், மானின் மருண்ட பார்வையையும், கிளி போல கொஞ்சிப் பேசும் மழலை மொழியையும் உடைய அமைதியும் அழகும் நிறைந்த பெண்கள் காற்று நுழைகின்ற வழியினைப் பொருந்தி நின்றிருந்தனர். நெருக்கமாக வளையல்கள் அணிந்து அப்பெண்கள், உயர்ந்த மலையின் பக்கத்திலே நுண்ணிய மகரந்தத்தினை உதிர்க்கும் காந்தள் மலரின் துடுப்பு போன்ற அழகிய மடல்கள், கவிழ்ந்து கொத்தாக இருப்பதைப் போல , முன்கையினைக் கூப்பி வீதியில் நடைபெறும் வெறியாட்டு விழாவினைக் கண்டு முருகனை வழிபட்டனர்.முருகனுக்காக வெறியாடல் என்ற விழாவினை நடத்திக் கொண்டிருக்கும் மகளிர் பாடும் இசையோடு பொருந்தி புல்லாங்குழல் இசைக்க, யாழ் மெல்லிய ஓசையினை எழுப்ப, மத்தளம் முழங்க, முரசு ஒலிக்க விழாக்கள் என்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அங்காடித் தெருவினை (கடைவீதி) உடையது காவிரிப்பூம்பட்டினம்.
சொற்பொருள் விளக்கம்
குறுந்தொடை – ஒன்றற்கொன்று அணிமைத்தாக , நெருக்கமாக, தொடர்ச்சியாக , நெடும் படிக்கால் – நீண்ட ஏணி , கொடுந்திண்ணை – வளைந்த திண்ணை, பல் தகைப்பின் – பல தடுப்புகளை கொண்ட, புழை – சிறு வாயில், வாயில் – பெரிய வாயில் , போகு இடை கழி – வாயிலைச் சேர்ந்து மாளிகைக்குச் செல்லும் நீண்ட உட்பகுதி , மழை தோயும் – மேகம் தவழ்கின்ற , உயர் மாடத்து – உயர்ந்த மாளிகையின் மேல் மாடத்தில் (மாடம் – மாளிகையின் பல்வேறு அடுக்குகளே மாடம்) சேவடி – சிவந்த பாதங்கள் , செறி குறங்கின்- நெருங்கிய தொடையினையும் , பாசிழை – அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட, பகட்டு அல்குல் – பொலிவுடன் விளங்கும் அடிவயிறும் ,தூசுடை – மெல்லிய ஆடை , துகிர்மேனி – பவளம் போன்ற மேனி , மயிலியல் – மயிலின் அழகு , மான் நோக்கு – மானின் மருண்ட பார்வை, கிளி மழலை – கிளி போலும் கொஞ்சி பேசும் மொழி ,மென் சாயலோர் – அமைதியும் அழகும் நிறைந்த பெண்கள், வளி நுழையும் – காற்று புகும், வாய் பொருந்தி – இடத்தினைச் சார்ந்து நின்று , ஓங்கு வரை – உயர்ந்த மலையின் , மருங்கின் – பக்கத்திலே , நுண்தாது – நுண்ணிய மகரந்தத் தாதினை, உறைக்கும் - சொரிகின்ற ,உதிர்கின்ற , காந்தள் – காந்தள், அம் துடுப்பின் – அழகிய மடல்கள் (பஃறுடுப் பெடுத்த வலங்கு குலைக் காந்தள் , (அகநா. 108) ,மலைபடு .336 , துடுப்பை – அகப்பை , அகப்பை போன்றிருப்பதால் காந்தளின் மடல் துடுப்பெனப்பட்டது.) கவி – வளைந்து,கவிழ்ந்து , குலை அன்ன – கொத்தாக இருப்பதைப் போல் , செறிதொடி – நெருக்கமாக வளையல்கள், முன்கை கூப்பி – முன் கையினைக் கூப்பி , செவ்வேள் – முருகன் , வெறியாடல் – வெறியாட்டு விழாவினை நடத்தும் , மகளிரொடு செறிய – மகளிரொடு பொருந்தி, குழல் அகவ – புல்லாங் குழல் இசைக்க , யாழ் முரல – யாழ் மெல்லிய ஓசையினை எழுப்ப , முழவு அதிர – மத்தளம் முழங்க , முரசு இயம்ப – முரசு ஒலிக்க ,விழவு அறா –விழாக்கள் எப்பொழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற , வியல் ஆவணத்த – அகன்ற கடைவீதியிலே, (வியலென் கிளவி அகலப் பொருட்டே , தொல் உயிரியல் .66.)

பல்வேறு கொடிகள்

தெய்வக்கொடி

மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலர் அணி வாயில் பலர்தொழு கொடியும் (159-160)
வீரர்களை வணங்குமிடத்தில் ஏற்றியுள்ள கொடி
வருபுனல் தந்த வெண்மணல்
உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக்
கூழுடை கொழுமஞ்சிகை
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசி பலிசிதறி
பாகு உகுத்த பசுமெழுக்கின்
காழ் ஊன்றிய கவிகிடுகின்
மேல் ஊன்றிய துகிற்கொடியும் (161- 168)
பல்துறை சான்றோர் வாதிடும் இடத்திலுள்ள கொடி
பல்கேள்வி துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
உறல்குறித்து எடுத்த உருகெழு கொடியும் (169-171

கப்பலின் மேலேற்றப்பட்டுள்ள கொடிகள்

வெளில் இளக்கும் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்துறைத்
தூங்குநாவாய் துவன்று இருக்கை
மிசைக் கூப்பின் நசைக் கொடியும் (172-175)
கள் விற்கும் முன்றிலிலுள்ள கொடி
மீன்தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலிமுன்றில்
மணல் குவைஇ மலர்சிதறிப்
பலர்புகுமனைப் பலிப்புதவின்
நறவு தொடைக் கொடியோடு (176-180)
பல்வேறு கொடிகள்
தெய்வக்கொடி
(க.ரை) குற்றமில்லாத சிறப்பினையுடைய , தெய்வம் கோவிலில் மலரால் அழகு செய்யப்பெற்ற வாயிலில் பலரும் தொழுகின்ற தெய்வக் கொடியும் அழகு செய்யப்பெற்ற வாயிலில் பலரும் தொழுகின்ற தெய்வக் கொடியும்,
சொற்பொருள் விளக்கம்
மையறு சிறப்பின் – குற்றமில்லாத சிறப்பினையுடைய ,தெய்வம் சேர்த்திய – தெய்வம் இருக்கின்ற , மலர் அணி வாயில் – மலரால் அழகு செய்யப்பெற்ற வாயில், பலர் தொழு கொடியும் – பலரும் வணங்குகின்ற கொடியும்.
வீரர்களை வணங்குமிடத்தில் ஏற்றியுள்ள கொடி
(க.ரை) கீழே விரித்த ஆடையில் சமைத்த உணவுள்ள கூடையுடன் மென்மையான தின்பண்டங்களையும் பரப்பி, வெண்மையான அரிசியினையும் பூவினையும் தூவி வீரர்களை நினைந்து வழிபாடு செய்வர். அவ்விடத்தில் ஆற்று நீர்க் கொண்டு வருகின்ற வெண்மையான மணலினையுடைய காட்டாற்றின் கரையில், வடிவமும் நிறமும் பொருந்திய கரும்பில் பூத்திருக்கும் இயற்கையழகுடனிருக்கும் பூவினைப் போல, பசுவின் சாணத்தினை அழகாக இட்டு மெழுகிய இடத்தில் குத்துக்கோலை ஊன்றி, அதன் மேலே கேடயத்தைக் கவிழ்த்து வைத்துள்ளனர். கேடயத்தின் மேலே துணியாலாகிய கொடியினை ஏற்றியுள்ளனர்.
சொற்பொருள் விளக்கம்
வருபுனல் – ஆற்றுநீர் , தந்த வெண்மணல் – கொண்டு வந்த வெண்மையான மணல் ,கான்யாற்று – காட்டாற்றின் , உருகெழு – வடிவமும் நிறமும், கரும்பின் – கரும்பினது, ஒண்பூப்போல – இயற்கையழகுடன் கூடிய பூப்போல,கூழுடை – சமைத்த உணவினையுடைய, கொழு மஞ்சிகை – வளப்பமான கூடையும் , தாழ் உடை – கீழே விரித்த உடை, தண் பணியத்து – மென்மையான தின்பண்டங்களும், வால் அரிசி – வெண்மையான அரிசி , பலி சிதறி – (வழிபாட்டிற்காக ) பூவினைத் தூவி, பாகு – அழகு , உகுத்த -வார்த்த ; சிதறிய ;சொரிந்த ;பசு மெழுக்கின் – பசுஞ்சாணத்தின் , காழ் ஊன்றிய – குத்துக்கோலை ஊன்றி , கவி கிடுகின் – கவிழ்த்து வைத்த கேடயத்தின், மேலூன்றிய – மேலே நாட்டப்பட்ட, துகிற் கொடியும் – துணியாலாகிய கொடியும்,
பல்துறை சான்றோர் வாதிடும் இடத்திலுள்ள கொடி
(க.ரை)பல்துறைகளிலும் கேள்வியறிவோடு , பல்துறை நூல்களையும் முற்றும் கற்ற , பழைமையான சான்றோர்களின் மரபில் வந்த நல்ல ஆசிரியர்கள் , வாதம் செய்தலின் பொருட்டு நாட்டிய மேன்மை பொருந்திய கொடியும்,
சொற்பொருள் விளக்கம்
பல்வேள்வி - பலதுறைகளிலும் கேள்வியறிவு , துறை போகிய- பல்துறை நூல்களையும் முற்றும கற்ற , தொல் – பழைமையான ஆணை – சான்றோர்களின் மரபில் வந்த , நல் ஆசிரியர் – நல்ல ஆசிரியர் , உறழ் குறித்து – வாதம் செய்தலின் பொருட்டு , எடுத்த - நாட்டிய உரு – மேன்மை ,கெழு – பொருந்திய , கொடியும் – கொடியும்.
கப்பலின் மேலேற்றப்பட்டுள்ள கொடி
(க.ரை) காண்பதற்கு இனிய புகார் நகரின், அலை வீசும் கடற்கரையின் முன்னே, கட்டுத்தறியை அசைக்கும் ஆண் யானையைப் போல , அசைகின்ற மரக்கலன்கள் நிறைந்த இடத்தில் மரக்கலன்களின் மேல் ஏற்றப்பட்டுள்ள விருப்பமான கொடியும்,
 சொற்பொருள் விளக்கம்.
வெளில் இளக்கும் - கட்டுத்தறியை, களிறு போல- களிற்றைப் போல, அலை வீசும் கடற்கரையின் முன்னே,தீம்புகார் திரை முன்துறை-இனிய புகார் நகரின்  துவன்று – நிறைந்த , இருக்கை – இருப்பிடத்தில், மிசை – மேலே , கூம்பின் – மரக்கலன்களின் உச்சி , நசைக் கொடி – விருப்பமான கொடி, (அயல்நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகர்களுக்குப் பிறநாட்டு கப்பல்கள் வந்துள்ளமையினை அறிவிப்பன அவற்றின் மேலே ஏற்றப்பட்டுள்ள கொடிகளே என்பதால் நசைக்கொடி என்றனர்)
கள் விற்போர் ஏற்றியுள்ள கொடி
(க.ரை) மீனை வெட்டி, இறைச்சியைத் (கூர் வாளால்) துண்டுகளாக்கி , தசையினைப் பொரிக்கின்ற ஓசையினை உடைய முற்றத்தினையுடைய அவ்வீட்டின் வாசலில் , மணலைக் குவித்து , மலர்களைத் தூவி , தெய்வத்திற்கு வழிபாடு நடத்தியுள்ளனர். வழிபாடு நடைபெற்றுள்ள, பலரும் புகுகின்ற கள் விற்கும் இவ்வீட்டில், கள்ளை விற்றல் குறித்து ஏற்றியுள்ள கொடியும்,
சொற்பொருள் விளக்கம்
மீன் தடிந்து – மீனை வெட்டி ,விடக்கு – இறைச்சி , அறுத்து – (கூர்வாளால் ) துண்டுகளாக்கி , ஊன் – தசை , பொரிக்கும் – பொரிக்கின்ற (நெய்யுறப் )பொரித்த (புறம். 397) ஒலி முன்றில் – ஓசையினை உடைய முற்றத்தில் ,மணல் குவைஇ – மணலைக் குவித்து ,மலர் சிதறி – மலர்களைத் தூவி ,பலர் புகு மனை – பலரும் புகுகின்ற கள் விற்கும் வீட்டின் , பலிப் புதவின் – தெய்வத்திற்கு வழிபாடு நிகழ்த்தியுள்ள வாயிலில், நறவு நொடை – கள் விற்றல், கொடியோடு – கொடியினோடும்,
பல்கொடி விளங்கும் பட்டினம்
பிறபிறவும் நனிவிரைஇ
பல்வேறு உருவின் பதாகை நீழல்
செல்கதிர் நுழையாச் செழுநகர்(181-183)
(க.ரை) மற்றும் பல்வேறு பண்டங்களை விற்போரும் அடையாளமாக ஏற்றியுள்ள கொடிகளும், மிகவும் கலந்து, பல்வேறு வடிவத்தினையுடைய கொடிகளின் நிழலில், செல்லுகின்ற சூரியனின் கதிர்கள் புக முடியாத செழிப்பான ஊர் பூம்புகார்.
சொற்பொருள் விளக்கம்
பிற பிறவும்- மற்றும் பிற பிற கொடிகளும் , நனி விரைஇ – மிகவும் கலந்து, பல்வேறு உருவின் – பல்வேறு வடிவத்தினையுடைய, பதாகை நீழல் – கொடிகளின் நிழலில், செல்கதிர் – சூரியனின் நுழைகின்ற கதிர்கள், நுழையா – நுழைய முடியாதவாறு, செழுநகர் – செழிப்பான ஊர்(பூம்புகார்)
பூம்புகாரின் செல்வவளம் நிறைந்த வீதிகள்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பின்
செல்லா நல்லிசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகின் (183-193)
(க.ரை)சூரியனின் கதிர்கள் நுழைய முடியாத வளமான பூம்புகாரின் எல்லை அழியாத நல்ல புகழினை உடைய தேவர்களின் பாதுகாப்பினைப் பெற்றது. இப்பூம்புகாரில் , வெளிநாடுகளிலிருந்து கடல் வழியே கப்பலில் வந்த நிமிர்ந்து வேகமாகச் செல்லும் குதிரைகளும், உள்நாட்டிலிருந்து வண்டிகள் மூலம் வந்த கரிய மிளகு மூடைகளும், வடக்கே உள்ள மலையில் விளைந்த மணி வகைகளும், (உருத்திராக்கம் , (sacred bead) பொன்னும், மேற்குமலையில் தோன்றிய சந்தனமும் அகிலும், தென்கடலில் கிடைத்த முத்தும், கீழ்த்திசைக் கடலில் உருவான பவளமும், கங்கையின் நீர்வளத்தால் விளைந்த பலவகைப் பொருட்களும், காவிரியின் நீர் வளத்தால் பெற்ற பல்வகைப் பொருட்களும் ,இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருட்களும், இவை தவிர அரிதான பொருட்களும், பெரிதான பொருட்களும் குவிந்து , மிகுதியாகப் பலவகை வளங்களும் ஒன்றாகக் கிடக்கின்ற அகன்ற இடத்தினையுடைய தெருக்களில்.
சொற்பொருள் விளக்கம்
செல்கதிர் – செல்லுகின்ற (சூரியனின்) கதிர், நுழையா – நுழைய முடியாத , செழுநகர் – செழிப்பான நகரத்தின், வரைப்பின் – எல்லையில், செல்லா நல்லிசை – அழியாத நல்ல புகழ், அமரர் காப்பின் – தேவர்களின் பாதுகாவலால் , நீரின் வந்த – கப்பலிலே வந்த, நிமிர்பரி- நிமிர்ந்து விரைந்து செல்லும்,புரவியும் – குதிரையும் , காலின் வந்த – உள்நாட்டிலிருந்து வண்டியில் எடுத்து வந்த , கருங்கறி மூடையும் – கரிய மிளகு மூடைகளும் ,வடமலைப் பிறந்த – வடக்கே இருக்கின்ற மலையிலே உருவான மணியும் (உருத்திராக்கம்) , மாமலை பிறந்த காமரு மணியும் (புறநா, 218) மாசிலா மணிதிகழ் மேனி (பெரியபு. திருக்கூட்டம் . 6) பொன்னும் – உலோகமும், குடமலைப் பிறந்த-மேற்கு மலையில் உருவான, ஆரமும் – சந்தனமும் , அகிலும் – மணப்பொருளும் , (சிறுபா.116), அகில்உண விரித்த அம்மென் கூந்தலின் (சிறுபா.263) கங்கை வாரியும் - கங்கையின் நீர்வளத்தால் பெற்ற பலவகைப் பொருட்களும் ,காவிரிப்பயனும் –காவிரியின் நீர் வளத்தால் விளைந்த பலவகைப் பொருட்களும், ஈழத்து உணவும் – இலங்கையிலிருந்து வந்த உணவுப் பொருட்களும் (இலங்கை தேங்காய் நெய் தமிழ் நாட்டினரால் மிகவும் விரும்பத்தக்கதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.) காழகத்து ஆக்கமும் – கடாரத்திலிருந்து (பர்மா – தற்போதைய மியான்மர் ) வந்த நுகர் பொருட்களும் ,அரியனவும் – அரிதாக கிடைக்கின்ற பொருட்களும் ,பெரியவும்- பெரிய பொருட்களும், நெரிய – குவிந்து , ஈண்டி – மிகுந்து , (இயைந்தொருங்கீண்டி. சிலம்பு – 6.145) வளம் – செழிப்பு ,தலை – கூடுதல் (வளித் தலைஇய தீயும் . புறம் .2,4) மயங்கிய – நெருங்கிய (முகிழ் மயங்கு முல்லை பரிபா. 15,39) நனந்தலை – அகன்ற இடம் ,மறுகின் – தெருவில்.
காவிரிப்பூம்பட்டினத்து உழவர்களின் நல்லியல்புகள்
நீர்நாப் பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சிக்
கிளை கலித்துப் பகை பேணாது
வலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
நல்ஆனொடு பகடு ஓம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டா தண்ணிழல் வாழ்க்கைக்
கொடுமேழி நசை உழவர் (194- 205)
(க.ரை) காவிரிப்பூம்பட்டினத்திலே நீருக்கு நடுவிலேயும் நிலத்திற்கு மேலாகவும் வாழ்கின்ற மீன்களும்,விலங்குகளும் தங்களுடைய இனத்தைப் பெருக்கி, ஒன்றுக்கொன்று பகை கொள்ளாது வாழ்ந்தன. பரதவர் வீட்டு முற்றத்தில் அச்சமின்றி மீன்கள் துள்ளி விளையாடின. இறைச்சியை விலை கூறி விற்பவரின் குடிசையில் விலங்குகள் திரண்டிருந்தன. அதற்குத் தக்கவாறு மீன் பிடிப்பவர் மற்றும் இறைச்சி விற்போரின் கொலை குணத்தை அழித்தனர். திருடுவோரும் அத்தொழிலிலிருந்து விலகினர். உழவர்கள் தேவர்களைப் போற்றினர். வேள்விகள் செய்தனர்; நல்ல பசுக்களோடு எருதுகளையும் பாதுகாத்தனர்; நான்கு வேதங்களையும் ஓதுகின்ற அந்தணர்களின் புகழினை நிலைபெறச் செய்தனர் . விருந்தினர்களுக்கு, உணவுப் பொருட்களைச் சமைத்துக் கொடுத்தனர் ; சமைக்காத அரிசி போன்றவற்றையும் அளித்தனர் ; குறைவின்றி அறச் செயல்களைச் செய்து வந்தனர். இவ்வாறாக வளைந்த ஏரினை விரும்பிச் செலுத்துகின்ற உழவர்களின் வாழ்க்கை, மற்றவர்களுக்குக் குளிர்ச்சியான நிழலாக இருந்தது.
சொற்பொருள் விளக்கம்
நீர்நாப்பண்ணும் – நீருக்கு நடுவிலேயும் , நிலத்தின் மேலும் – நிலத்திற்கு மேலாகவும் , ஏமாப்ப – இன்புற்று (காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப புறம் (198.8)) , இனிது – நன்றாக , துஞ்சி – தூங்கி ,கிளை கலித்து – இனத்தைப் பெருக்கி . பகை பேணாது – பகையைப் போற்றாது , பகையை உட்கொள்ளாது , வலைஞர் – பரதவர் , முன்றில் – முற்றத்தில் , மீன் பிறழவும் – மீன்கள் துள்ளி விளையாடவும் ,விலைஞர் – இறைச்சியை விலை கூறி விற்பவர் , குரம்பை – குடிசை , மா ஈண்டவும் – விலங்குகள் திரண்டு நிற்கவும் , கொலை கடிந்தும் – கொலைக் குணத்தை அழித்தும், களவு நீக்கியும் – களவுத்தொழில் செய்வோர் அதனை நீக்கியும் , அமரர் பேணியும் – தேவர்களைப் போற்றியும் , ஆவுதி அருத்தியும் – வேள்விகளை விரும்பிச் செய்தும் , நல் ஆனொடு – நல்ல பசுக்களோடு, பகடு ஓம்பியும் – எருமை மாடுகளைப் பாதுகாத்தும் , நான்மறையோர் – நான்கு வேதங்களை ஓதுகின்ற அந்தணர்கள் , புகழ் பரப்பியும் – புகழினை நிலைபெறச் செய்தும் , பண்ணியம் அட்டியும் – உணவுப் பண்டங்களைச் சமைத்தும் , பசும்பதம் கொடுத்தும்- சமைக்காது பசுமையாகக் கொடுத்தும் , புண்ணியம் முட்டா – அறச்செயல்களைக் குறைவின்றி , தண்ணிழல் – குளிர்ச்சியான நிழல் , வாழ்க்கை – வாழ்க்கை , கொடுமேழி- வளைந்த ஏரினை உடைய , நசை உழவர் – விரும்பிச் செலுத்தும் உழவர் (பல்குடை நீழலும் , தன்குடைக்கீழ் காண்பர் அலகுடை நீழலவர் 1039 என்ற குறளும் நினையத்தக்கது. கொலை ,களவுக்குக் காரணம் வறுமையே. வறுமையை உழவர்கள் போக்குவதால் கொலையும் ,களவும் விலக்கப்பட்டது என்று உழவர்கள் மேல் இதனை ஏற்றிக் கூறியுள்ளார்.)
வணிகர் குடிச்சிறப்பு
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் மிகை கொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல்கொண்டி துவன்று இருக்கை (206- 212)
(க.ரை) நீண்ட நுகத்தடியின் நடுவிலே உள்ள பகலாணி போல, நடுநிலை தவறாது வாழ்கின்ற நல்ல மனத்தினை உடையவர் வணிகர். இவர்கள் தம் குலத்துக்கு ஏற்படும் பழிக்கு அஞ்சி , உண்மையினையே பேசுவர். தம்முடைய பொருட்களையும் பிறருடைய பொருட்களையும் சமமாக மதித்து வாணிகம் செய்வர்.தாம் வாங்கும் பொருள்களை மிகுதியாக வாங்கவும் மாட்டார்; தாம் கொடுக்கின்ற பொருள்களைக் குறைவாகக் கொடுத்தலும் செய்யார். பல்வேறு பொருள்களின் விலையினையும் , நியாயமாகக் கூறி விற்பனை செய்வர். இவ்வாறு தொன்றுதொட்டு கொண்டு கொடுத்து வாணிகம் செய்வோர் நிறைந்து காணப்படும் இருப்பிடங்களைக் கொண்டு விளங்கியது காவிரிப்பூம்பட்டினம்.
சொற்பொருள் விளக்கம்
நெடுநுகத்து – ஏரிலோ (உழுதல்) , வண்டியிலோ பூட்டப்பட்ட இரண்டு எருதுகளின் கழுத்திலே இடும் நீண்ட நுகத்தடி ,பகல்போல- நுகத்தடியின் நடுப்பகுதியை விட்டு , சிறிது தவறி இருந்தாலும் ஒரு பக்கத்து எருது பாரத்தால் வருந்தும். வணிகர் நடுநிலை தவறினாலும் இந்த நிலையே ஏற்படும் என்பது கொண்டு பகலாணியை வணிகர்களின் நடுவுநிலைக்கு உவமிக்கின்றார்) நடுவுநின்ற – நடுவு நிலையோடு வாழ்கின்ற , நல் நெஞ்சினோர் – நல்ல மனமுடையோர் ,வடுஅஞ்சி – பழிச் சொல்லுக்கு அஞ்சி ,வாய் மொழிந்து – உண்மையினைக் கூறி, தமவும் பிறவும் – தம்முடைய பொருட்களையும் பிறருடைய பொருட்களையும், ஒப்ப – சமமாக , நாடி -நினைத்து , மதித்து , (வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் – குறள் (120) என்று வள்ளுவர் கூறியது பட்டினப்பாலை அடிகளோடு ஒப்பு நோக்கத்தக்கது) கொள்வதூஉம்- தாம் வாங்கும் பொருளையும், மிகை கொளாது – மிகுதியாக வாங்காது , கொடுப்பதூஉம்- தாம் கொடுக்கும் பொருள்களைக் குறை கொடாது – குறைவாகக் கொடுக்காமலும்,பல்பண்டம் – பல பொருள்களையும் ,பகர்ந்து- (விலையாகக் ) கூறி , வீசும் –விற்கும் , தொல்கொண்டி – தொன்றுதொட்டு கொண்டு கொடுத்து வாணிகம் செய்யும்,துவன்று – நிறைந்து காணப்படும் , இருக்கை- இருப்பிடம்.
பன்னாட்டினரும் கலந்து இனிது உறையும் புகார்
பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உணர்ந்த முதுவாய் ஒக்கல்
சாறுஅயர் மூதூர் சென்றுதொக்கு ஆங்கு
‘மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் (213-218)
(க.ரை) பல நாடுகளுக்கும் சென்று, பலவகை மக்கள் கூட்டத்தினரோடும் பழகி ,வேறுவேறான துறைகளில் சிறந்து விளங்குகின்ற , பேரறிவு நிரம்பப் பெற்ற சுற்றத்தினர்கள் , விழாக் கொண்டாடும் பழைமையான மூதூரிலே ஒன்று கூடியிருப்பது போல, பல்வேறு மொழிகளையும் கற்ற,தம் நாட்டிலிருந்து வாணிகத்திற்காக , காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்துள்ள குற்றமில்லாத பலநாடுகளையும் சேர்ந்தோர், அனைத்து நாட்டு மக்களோடும் இன்பமாக வாழும் குறைவில்லாத சிறப்பினை உடையது காவிரிப்பூம்பட்டினம்.
சொற்பொருள் விளக்கம்
பல்ஆயமொடு – பலவகை மக்கள் கூட்டத்தோடு , பதி பழகி – பல நாடுகளுக்கும சென்று பழகி , வேறு வேறு – வெவ்வேறான துறைகளில், உயர்ந்த – சிறந்த , முது – பேரறிவு , வாய் – வாய்ந்த , நிரம்பப்பெற்ற , ஒக்கல் – சுற்றத்தினர் , சாறு அயர் – விழாக் கொண்டாடும், மூதூர் – பழைமையான ஊர் , சென்று தொக்கு ஆங்கு – சென்று கூடியது போல , பழிதீர் – குற்றமில்லாத ,தேஎத்து – நாடுகளில் , மொழிபல பெருகிய – பல மொழிகளையும் கற்று மொழியறிவு பெருகிய , புலம்பெயர் மாக்கள் – தாம் வாழ்ந்த நாட்டினின்றும் பிரிந்து காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்து வசிக்கும் வணிகர், கலந்து இனிது – அனைத்து நாட்டினரோடும் கலந்து பழகி இன்பமாக , உறையும் – வாழும், முட்டாச் சிறப்பின் – குறைவில்லாத சிறப்பினை உடையது , பட்டினம் – காவிரிப்பூம்பட்டினம்.
வாரேன் வாழிய நெஞ்சே!
..............................பெறினும்
வார் இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே ( 218- 220)
(க.ரை) குறைவில்லாத சிறப்பினையுடைய இக்காவிரிப்பூம்பட்டினத்தையே உரிமையென பெறுவதாக இருந்தாலும், நீண்ட கரிய கூந்தலினை உடையவளும், ஒளிவீசும் அணிகலன்களை அணிந்தவளுமாகிய என் தலைவியை விட்டுப் பிரிந்து , மனமே! உன்னோடு வர மாட்டேன் , நெஞ்சமே நீ வாழ்வாயாக!
சொற்பொருள் விளக்கம்
பெறினும் – காவிரிப் பூம்பட்டினத்தையே உரிமையெனப் பெற்றாலும் , வார் இரும் கூந்தல் – நீண்ட கரிய கூந்தல் , வயங்கு இழை – செய்கின்ற அணிகலன்கள், ஒழிய – பிரிந்திருக்க, நெஞ்சே - செஞ்சமே! வாரேன் – (நான் உன்னோடு ) வர மாட்டேன், வாழிய - வாழ்வாயக!
(தலைவியின் இயற்கையழகை ‘வாரிருங் கூந்தல் ’ என்றும், செய்கையழகை , ‘வயங்கு இழை ’ என்றும் வர்ணித்து , இயற்கையழகும் செயற்கையழகும் ஒருங்கே பெற்று விளங்கும் ‘ என் தலைவியைப் பிரியேன் ’ என்று தலைவன் கூறுவது உண்மையிலே அழகு)
‘பட்டினப்பாலை’ என்று கூறுதற்குரிய பாலைத்திணையின் உரிப்பொருளை உணர்த்தும் பகுதி இதுவாகும் . பாலைத்திணையின் உரிப்பொருள் பிரிதலும் பிரிதலுக்கான காரணமும் ஆகும். இங்குப் பிரிய மாட்டேன் என்று தலைவன் கூறுவது எப்படிப் பாலைத்திணையுள் அடங்கும்? மனத்திடம் பிரிய மாட்டேன் என்று அப்போதைக்குக் கூறினாலும் , தலைவியிடம் தான் செல்லுதற்கு உரிய காரணத்தை விளக்கி பின்னர் தலைவன் பிரிவான் என்பதால் இதுவும் பாலை திணையே.
‘செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே
வன்புறை குறித்தல் தவிர்ச்சியாகும் ’
( தொல் . கற்பியல் – 44)
என்கிறது தொல்காப்பியம்.
இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினும்
…………………………………..
கோலமை குறுந்தொடி குறுமகள் ஒழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார்
(குறுந் . 297.1-9)
என்ற குறுந்தொகைப் பாடல் மேற்கூறிய பட்டினப்பாலை வரிகளோடு ஒப்பு நோக்கத்தக்கது.
(220 வரி தொடங்கி 299 வரி வரை அகத்துறை பாலைத்திணைக்குப் புறமாகிய வாகைத்திணை அமைய, பாட்டுடைத் தலைவனின் வீரமும் ஈகைத்திறனும் கூறப்பட்டுள்ளது.)
திருமாவளவனின் பெருமைகள்
திருமாவளவன் அரசுரிமை பெறல்
.........................கூருகிர்
கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர், பிணியகத்து இருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிப்புக் காங்கு
நுண்ணிதின் உணரநாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப்பு ஏறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி (220-227)
(க.ரை) கூர்மையான நகங்களையும் வளைந்த வரிகளையும் கொண்ட புலிக்குட்டி , கூட்டினுள் (அடைப்பட்டு) வளர்ந்ததைப் போல, பகைவர் காவலிடத்து இருந்தான் திருமாவளவன். இதனால் அவனின் மனவுறுதி பெருகியது. நீண்ட துதிக்கையினையுடைய யானை, உயர்ந்த கரை கவிழ்ந்து விழுமாறு தந்தங்களால் குத்தி குழியை அழித்து வெளியேறி, தன் பெண் யானையைச் சேர்வது போல , நுண்ணறிவினால், உணர்ந்து ஆராய்ந்து பகைவரின் நெருங்கிய வலிமையான காவலையுடைய மதிலின் மேல் ஏறி , வாளை உறையிலிருந்து உருவி, பகைவருக்கு அச்சத்தைத் தரும் வகையில், தனக்குரிய ஆட்சியுரிமையை, தனக்கு வந்து சேர வேண்டிய முறையாலே பெற்றான்.

சொற்பொருள் விளக்கம்
கூருகிர் – கூர்மையான நகங்கள், கொடுவரி – வளைந்தவரிகள், குருளை – புலிக்குடடி , கூட்டுள் – கூட்டினுள் , வளர்ந்தாங்கு-வளர்ந்ததைப் போலபிறர் – பகைவர் ,பிணி அகத்து – காவலிடத்து (பிணியகம் – காவலிடம் ) இருந்து – இருந்து, பீடு – வலிமை , (நண்ணாரும் உட்கும் என் பீடு. குறள் .1088) காழ் – மனவுறுதி , முற்றி – பெருகி, அருங்கரை – உயர்ந்த கரை, கவிய – கவிழ்ந்து விழுமாறு , குத்தி – தந்தங்களால் குத்தி, குழி கொன்று – குழியை அழித்து, (வேளியேறும் ) பெருங்கையானை – நீண்ட துதிக்கையுடைய யானை, பிடி புக்கு ஆங்கு – பெண் யானையைச் சேர்வது போல, நுண்ணிதின் உணர – நுண்ணறிவினால் உணர்ந்து , நாடி – ஆராய்ந்து, நண்ணார் – பகைவர் , செறிவுடை- நெருங்கிய, திண்காப்பு ஏறி – வலிமையான காவலையுடைய மதிலின் மேல் ஏறி , வாள் கழித்து – வாளை உறையிலிருந்து உருவி, உருகெழு – அச்சம் தருகின்ற , தாயம் – ஆட்சியுரிமை , ஊழின் – முறையாலே , எய்தி – பெற்று,
திருமாவளவனின் போர்த்திறன்
பெற்றவை மகிழ்தல் செய்யான் செய்றோர்
கடிஅரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்
முடியுடைக் கருந்தலை புரட்டும் முன்தாள்
உகிருடை அடிய ஓங்கு எழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துஉலாய் நடப்ப
தூறுஇவர் துறுகல் போலப் போர்வேட்டு
வேறுபல் பூளையொடு உழிஞை சூடிப்
பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை அதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சமம் முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை எடுப்பி, (228- 239 )
(க.ரை) திருமாவளவன் அரசுரிமையைப் பெற்றதோடு மகிழ்ச்சி அடையாதவன், அவனின் யானைகளோ பகைவரின் காவல் மிகுந்த அரணை அழித்துக் கதவுகளை முறிக்கும் கொம்புகளை உடையன. இவை பகைவரின் மணி முடியணிந்த கரிய தலைகளை உருட்டும் முன்னங்கால்களில் நகங்களையுடைய பாதத்தினைப் பெற்றிருந்தன. இத்தகு பெருமையும் அழகும் நிறைந்த யானைகளோடும், திருத்தமாகச் செய்யப் பெற்ற மணி அணிந்த குதிரைகளோடும் சென்று, பகைநாட்டு வீரர்கள் வீழுமாறும், பெரிதாகிய நல்ல வானத்திலே பருந்துகள் உலவித் திரியவும், போரினை விரும்பிச் செய்தவன். தூறுகள் படர்ந்த குன்று போல, வேறு வேறாகிய பல பூக்களோடு, வெற்றிப் பூவாகிய பூளை பூக்களையும், பகைவர் மதிலை வளைத்துப் போர் செய்தலுக்கான உழிஞைப் பூக்களையும் அடையாளமாகச் சூடிய போர் மறவர்களோடும், பேயின் பெரிய கண் போன்ற , பெரிய அடிக்கும் இடத்தைக் கொண்ட முழங்குகின்ற காவல் முரசமானது அகன்ற பாசறையில் அதிர்ந்து முழங்குமாறு , பகைவரின் போர்முனை அழியுமாறு போர் நடத்திச் சென்றவன் திருமாவளவன். மதில் கவர்தலாகிய முற்படச் செய்யும் போரிலே மதிலை அழித்து , முடிவாக அரணினை மிக்கு அடைந்து , குளிர்ச்சியான மருத நிலத்தில் இருந்த மக்களை, அங்கிருந்து வெளியேறச் செய்தவன்.
சொற்பொருள் விளக்கம்
பெற்றவை – பெற்ற அரசுரிமையோடு , மகிழ்தல் – மகிழ்ச்சி, செய்யான் – அடையான் , செற்றோர் – பகைவர் , கடி அரண் – காவல் மிகுந்த அரண், தொலைத்த- அழித்த , கதவுகொல் – கதவுகளை முறிக்கும், மருப்பின் – கொம்பினையுடைய , முடியுடை கருந்தலை – பகைவரின் மணி முடியினையுடைய கரிய தலைகளை , புரட்டும் – உருட்டும், முன்தாள் – முன்னங்கால் , உகிர் உடை அடிய – நகங்களைக் கொண்ட பாதங்கைளைப் பெற்ற ,ஓங்கு எழில் யானை- பெருமையும் அழகும் நிறைந்த யானை, வடிமணி – திருத்தமாகச் செய்யப்பெற்ற மணி அணிந்த ,புரவியொடு – குதிரைகளோடும் (சென்று) ,போர்வேட்டு – போரை விரும்பி, தூறு இவர் – தூறுகள் படர்ந்த , துறுகல் போல – குன்று போல, வேறு பல – வேறாகிய பல பூக்களோடும், பூளையொடு – வெற்றிப் பூவாகிய பூளைப் பூக்களையும் , உழிஞை சூடி – உழிஞை மலர்களையும் அடையாளமாகச் சூடி, பேய்க்கண் அன்ன – பேயின் கண் போன்ற , மாக்கண் – பெரிய அடிக்கும் இடத்தைக் கொண்ட , பிளிறு கடி முரசம் – முழங்குகின்ற காவல் முரசம், அகல் அறை – அகன்ற பாசறையில், அதிர்வன முழங்க – அதிர்ந்து முழங்குமாறு , முனைகெடச் சென்று – பகைவரின் போர்முனை அழியுமாறு போர் நடத்திச் சென்று , முன் சமம் – மதில் கவர்தலாகிய முற்படச் செய்யும் போரிலே, முருக்கி – அழித்து, தலை- முடிவாக (அரணினை ), தவச் செல்லுதல் – மிக்கு அடைந்து , தன்பணை – குளிர்ச்சியான மருத நிலத்து (மக்களை ) , எடுப்பி – (அவ்விடத்திலிருந்து ) போக்கி

திருமாவளவன் உடற்றிய போரினால் மருத நில வளம் அழிதல்
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி
மாஇதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி
கராஅம் கலித்த கண்அகன் பொய்கை
கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று
அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும் (240-245)
(க.ரை) திருமாவளவன் போர் உடற்றுதற்கு முன்னர் வயல்களில் வெண்மையான பூக்களையுடைய கரும்போடு, செந்நெற்பயிர்களும் நீண்டு செழித்து வளர்ந்திருந்தன. அகன்ற இடத்தையுடைய பொய்கையில் பெரிய இதழ்களையுடைய குவளை மலர்களோடு நெய்தலும் ஒன்றோடொன்று கலந்து மலர்ந்திருந்தன. அப்பொய்கையிலிருந்த முதலையும் செருக்கோடு இருந்தது. திருமாவளவன் போர் புரிந்த பின்பு , செழித்த அடிப்பகுதியைக் கொண்ட அறுகம் புற்களோடு , கோரைப் புற்களும் நீண்டு வளர்ந்து ,வயல்களும் குளங்களும் வேறுபாடு அறியமுடியாதவாறு நீரின்றிக் கிடந்தன. அங்கே திரிந்த வளைந்த கொம்புகளையுடைய இரலை மான்களோடு பெண்மான்களும் துள்ளித் திரிந்தன.
சொற்பொருள் விளக்கம்
வெண்பூக் கரும்பொடு – வெண்மையான பூக்களையுடைய கரும்போடு ,செந்நெல் நீடி – செந்நெல் நீண்டு , மா இதழ் – பெரிய இதழ், குவளையொடு – குவளைமலர்களோடு , நெய்தலும் மயங்கி நெய்தற்பூவும் ஒன்றொடொன்று கலந்து , கராஅம் – முதலை,கலித்த – செருக்குடனிருந்த , கண் அகன் பொய்கை – அகன்ற இடத்தையுடைய பொய்கை , கொழுங்கால் – வளப்பமான அடிப்பகுதி , புதவமொடு – அறுகம்புல்லொடு , செருத்தி நீடி – கோரைப் புற்களும் நீண்டு வளர்ந்து ,செறுவும்- வயல்களும் , வாவியும் – குளங்களும் ,மயங்கி – வேறுபாடு அறிய முடியாதவாறு , நீர் அற்று – நீரின்றி , நீரில்லாமல், அறுகோட்டு இரலை – திரிந்து வளைந்த கொம்புகளையுடைய இரலை மான்கள், மான்பிணை – பெண் மான்களும் , உகளவும் – துள்ளித் திரியவும்.
பகைவர் நாட்டுக் கந்துடைப் பொதியிலின் நிலை
(வழிபாட்டிடம்)
கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்
பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப்
பெருநல் யானையொடு பிடிபுணர்ந்து உறையவும் (246-251)
(க.ரை)கடவுள் உறைகின்ற இடமான கந்துடை பொதியிலில் பகைவர் நாட்டிலிருந்து பிடித்து வரப்பட்ட பெண்கள் (கொண்டி மகளிர் . கொள்ளையிட்டு , கப்பமாகக் கொண்டு வரப்பட்ட பெண்கள்) உண்ணும் நீர் இருக்கின்ற நீர்த்துறையிலே மூழ்கி , அந்தி நேரத்தில் குறைதலில்லாத விளக்கினை ஏற்றுவர். மலர்களால் அழகு செய்யப்பெற்று, பசுஞ்சாணியால் மெழுகப்பட்டு விளங்கும் அவ்விடத்தில் ஏறிச் சென்று பலரும் தொழுவர் . அப்பொதியில் புதிதாக வருகின்றவர்கள் தங்குமிடமாகவும் இருந்தது.
திருமாவளவன் போர் புரிந்த பின்னர் , பெரிய சிறந்த யானைகளும் அதன் பெண் யானைகளும் கூடி, அப்பொதியிலின் பருத்த நிலையினையுடைய நீண்ட தூண்கள் சாயுமாறு உராய்ந்து, அங்கேயே தங்கின.
சொற்பொருள் விளக்கம்
கொண்டி மகளிர் –பகைவர் நாட்டிலிருந்து கப்பமாகக் கொண்டு வரப்பட்ட மகளிர், (கொண்டி – கொள்ளுகை , நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் (மதுரைக்காஞ்சி. 583) போரில் வென்றவர் , தோற்றவர் மனைவியரையும், பெண்டிரையும் சிறைபிடித்து வந்து தம் நாட்டில் கோவில் பணிகளைச் செய்பவராக வைத்திருத்தல் என்பது பண்டைய வழக்கம் போலும்) உண்துறை மூழ்கி- உண்ணும் நீர் இருக்கின்ற நீர்த் துறையிலே மூழ்கிக் குளித்த , (குடிப்பதற்கான நீருள்ள நீர்த்துறையிலே கொண்டி மகளிர் நீராடுதலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருத்தல் அறியமுடிகிறது,) அந்தி மாட்டிய – அந்தி நேரத்தில் கொளுத்திய (பகலும் இரவும் சந்திக்கும் நேரம்) , நந்தா விளக்கின் – குறைதலில்லாது எரிகின்ற விளக்கினை உடைய , மலரணி – மலர்களால் அழகு செய்யப்பட்ட ,(அணி – ஒப்பனை , பிங்கலந்தை நிகண்டு) , மெழுக்கம் – பசுஞ்சாணியால் மெழுகி வைத்த இடம் , ஏறி – ஏறிச் சென்று , பலர் தொழ - பலரும் தொழுதனர். வம்பலர் – புதியவர் , சேக்கும் – தங்கும் , கந்துடைப் பொதியில் – கடவுள் உறைகின்ற பலரும் வந்து தொழுகின்ற பொதுவான இடம் (கந்து + உடை – கடவுள் இருக்கின்ற , பொது + இல் – பொதுவான இடத்தில் )
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
(தொல் . பொருள் . 88)
கந்தழி என்பது கடவுள் வாழ்த்து. கந்து என்பது கடவுளைக் குறிப்பதாகவே உள்ளது. கந்தன் என்று முருகனை வழங்கல் ஈண்டு நினையத்தக்கது.
மாத்தாள் கந்தின் கரையிவர் பொதியில்
அங்குடிச் சீறூர் நாட்பலி மறந்த
(அகம் – 287.4-6)

கலிகெழு கடவுள் கந்தம் கைவிட
(புறம் . 52,12)

புதலிவர் பொதியில் கடவுள் போகிய
கருந்தாட் கந்தத்து
(அகம் .307. 11-12)

கந்துடை நிலையினும்
(திருமுரு.226)
என்றவாறு பிற சங்க இலக்கியங்களிலும் கந்துடைப் பொதியில் சுட்டப்பட்டுள்ளமை காணலாம்) பருநிலை- பருத்த நிலையினையுடைய , நெடுந்தூண் – நீண்ட தூண் , ஒல்க – சாயுமாறு , தீண்டி – உராய்ந்து , பெருநல் யானையொடு – பெரிய சிறந்த யானையோடு , பிடி புணர்ந்து- பெண் யானை கூடி , உறையவும் – தங்கவும்.

விழா இன்றிக் கிடந்த பொதுமன்றம்
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச்
சிறுபூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிப்பவும்
அழுகுரல் கூகையொடு ஆண்டலை விளப்பவும்
கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத்து அசைஇப்
பிணம்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும் (252- 260)
(க.ரை ) தெருவில் விழாவினை முன்னிட்டு மிக்க விலை கொடுத்து வாங்கிய நறுமணம் மிக்க மலர்களைத் தூவி இருப்பர். பேரறிவு வாய்த்த கூத்தரும் விறலியரும் விழாக் காலத்தில் பொதுமன்றத்தில் ஆடுகின்ற ஆட்டத்திற்கு ஏற்ப , மத்தள ஓசையும் முறுக்குண்ட நரம்புகளையுடைய யாழின் இசையும் சேர்ந்து ஒலிக்க, மக்கள் அதனைச் செவியால் நுகரும் திருவிழாக்கள் இல்லாது போயின. அச்சம் நிறைந்த அப்பொது மன்றத்தில் சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடு , அறுகம்புல்லும் படர்ந்திருக்க, கொடிய வாயினையுடைய நரியும் பிறர் அஞ்சுமாறு ஊளையிட்டது. அழுகுரல் போல குரல் எழுப்பும் கூகையும், ஆண்டலை என்னும் பறவையும் சத்தமிட்டன. கூட்டமாக ஆண்பேய்களோடு, தலையை விரித்து ஆடும் பிணம் தின்னும் பெண் பேய்களும் கூடி நின்றன.
சொற்பொருள் விளக்கம்
அருவிலை நறும்பூ – மிக்க விலை கொடுத்து வாங்கிய நறுமணம் மிக்க பூ, தூஉய் – தூவி , தெருவின் – தெருவிலே, முதுவாய் – பேரறிவு வாய்ந்த , கோடியர் - கூத்தர் , முழவொடு புணர்ந்த – முழவோசையோடு சேர்ந்து ,திரிபுரி நரம்பின் – முறுக்குண்ட நரம்புகளையுடைய, தீந்தொடை – இனிய யாழின் இசையினையும் , ஓர்க்கும் – செவியால் நுகரும் , பெருவிழா – பெரிய விழா, கழிந்த – இல்லாது போன , பேஎமுதிர் – அச்சம் நிறைந்த (பேம் நாம் உரும் என வரும் கிளவி, ஆமுறை மூன்றும் அச்சப் பொருள் தொல். உரி . 67) மன்றத்து – பொது மன்றத்தில் , சிறுபூ நெருஞ்சியோடு - சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடு, அருகை பம்பி- அருகம்புல் படர்ந்திருக்க, அழல்வாய் ஓரி – கொடிய வாயினையுடைய நரி (நரி ஊளையிடுதல் தீய சகுனம். ஆதலின் அதனது வாயை அழல் வாய் என்றார். நெருப்பு போன்று அழிக்கும் தன்மை என்பதாகவும் கொள்ளலாம்.)அஞ்சுவர-பிறர் அஞ்சுமாறு, கதிர்ப்பவும்- ஊளையிடவும் ,அழுகுரல் கூகையொடு – அழுகுரல் போல் ஒலி எழுப்பும் கூகையும் , ஆண்டலை – ஆண்டலை என்னும் பறவையும் ,விளிப்பவும் – சத்தமிடவும் ,கணம் கொள் – கூட்டமாக , கூளியொடு – ஆண் பேய்ளோடு , கதுப்பு – மயிரை இகுத்து – விரித் (கணங்கொள் பேய்மகள் கதுப்பு இகுத்தாட சிலம்பு. 26.210)அசைஇ – ஆடி , பிணம்தின் – பிணத்தைத் தின்னும் , யாக்கை – வடிவு , பேய்மகள் – பெண்பேய்கள் ,துவன்றவும் – கூடி நிற்கவும் (ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி . தொல் .பொருள் .192)
பூக்கள் சிதறிக் கிடந்த இடத்தில் நெருஞ்சியும், அறுகும் மண்டிக் கிடந்தன. மத்தளமும் யாழும் ஓசையெழுப்பிய இடத்தில் நரிகள் ஊளையிட்டன. யாழும் குழலும் இசைத்த இடத்தில் கூகையும் , ஆண்டலையும் சத்தமிட்டன. கூத்தரொடு விறலியரும் ஆடிய இடத்தில் ஆண் பேய்களோடு பெண் பேய்களும் ஆடின என்று ஒன்றற்கொன்று மாறுதலைச் சொல்லி விவரிக்கும் திறன் இன்றும் என்றும் படித்து இன்புறற்பாலது.

செழுநகரின் சீர்குலைந்த தன்மை
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில்
ஒண்சுவர் நல்இல் உயர்திணை இருந்து
பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழுநகர்த்
தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇக்
கொடுவில் எயினர் கொள்ளை உண்ட
உணவுஇல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து
வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவின் அழிய (261 – 269)
(க.ரை) வளைந்த தூண்களையுடைய மாடத்தின் நீண்ட வாசலில் கூடி நின்று, விருந்தினர் இடைவிடாமல் விருந்து உண்பர். அவ்வாறு விருந்தினர் உணவு உண்ணும் வகையில் சமையல் செய்யும் இடங்களில் (அட்டில்) குறைவில்லாது பெருஞ்சோறு இருந்து கொண்டே இருக்கும். இத்தகு நல்ல இல்லங்கள் ,சாந்து பூசப்பெற்று அழகுடன் விளங்கின. அவற்றின் உயர்ந்த இடத்தில் இருந்து பசுங்கிளிகள் மழலைச் சொற்களைப் பேசின.
திருமாவளவன் படையெடுத்துச் சென்று வெற்றி கொண்ட பின் ,பால் வளம் நிறைந்த வளமான இவ்வூரினைச் செருப்பணிந்த பாதங்களையும் கொடிய வில்லினையுமுடைய வேடர் துடி முழங்க , கூட்டமாகச் சென்று கொள்ளையிட்டமையால், நெல் இல்லாத நெற்கூட்டின் உள்ளிருந்து வளைந்த வாயினையுடைய கூகை ,பகல் பொழுதிலும் கூவிக் கொண்டிருந்தது.இவ்வாறு அரிய காவலமைந்த மதிலினையுடைய பகைவர் நாட்டு ஊர்களின் அழகு அழியுமாறுச் செய்தான் திருமாவளவன்.
சொற்பொருள் விளக்கம்
கொடுங்கால் மாடத்து – வளைந்த தூண்களையுடைய மாடம், நெடுங்கடை – நெடியவாசலில் , துவன்று – கூடி நின்று விருந்துண்டு – விருந்தினை உண்டு, ஆனா – அளவு கடந்து , நீங்காது , அடங்காது,பெருஞ்சோற்று – பெரும் சோற்றினையுடைய , அட்டில் – அடுக்குகளை(சமையலறை) , ஒண்சுவர் – (சாந்து பூசப்பெற்ற) அழகிய சுவர் , நல்இல் – நல்ல இல்லம், உயர்திணை – உயர்ந்த இடத்தில், இருந்து – இருந்து , பைங்கிளி – பசுங்கிளி, மிழற்றும் – மழலைக் சொற்களைப் பேசும் , பால் ஆர் – பால் வளம் நிறைந்த ,செழுநகர் – வளமான நகர், தொடு தோல் – செருப்பு , அடியர்- பாதத்தினை உடையர் , துடிபட – துடி (தோள் பறை) முழங்க , குழீஇ- கூட்டமாகச் சென்று , கொடுவல் எயினர்- கொடிய வில்லையுடைய வேடர் (வளைந்த வில் என்றும் கொள்ளலாம். வேடர் - பாலைநிலத்து மக்கள். இவர்களது தொழில் கொள்ளையிடுதலும், வழிப்பறிச் செய்தலும் . இயற்கை வளம் குன்றிய இடமாதலால், பாலை நிலத்து மக்களின் தொழில்- கொள்ளையிடுதல் ) , உணவு இல் – உணவுப் பொருட்கள் இல்லாத , வறுங்கூட்டு – ஒன்றுமில்லாத நெற்கூட்டின், உள்ளகத்து இருந்து – உள்ளே இருந்த , வளைவாய் – வளைந்த வாயையுடைய ,கூகை – கோட்டான் ,நன்பகல் - பகற்பொழுதில், குழறவும் – கூவவும் , அருங்கடி –அரிய காவல் , வரைப்பின் – மதிலின் , ஊர் – ஊரானது ,கவின் – அழகு, அழிய – கெடுமாறு செய்தான்.

திருமாவளவனின் கருதியது முடிக்கும் திறல்
பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கு அற
மலை அகழ்க்குவனே கடல்தூர்க் குவனே
வான் வீழ்க்குவனே வளிமாற்றுவன் எனத்
தான் முன்னியதுறை போகலின் (270- 273)
(க.ரை) பகைவரின் ஊரானது அழியுமாறு பெரும் நாசத்தினைச் செய்தும் அத்தோடு சினம் அடங்காது , பகைவரின் குலம் முழுவதும் அழித்தவன்;மலையைப் பெயர்த்து எடுப்பான் ; கடலை நீரின்றி தூர்த்து விடுவான் ; வானத்தை வீழ்த்துவான்; காற்றின் திசையை மாற்றுவான் என உலகோர் புகழ்ந்து கூறும்படி , தான் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்த செயல்களைச் செய்து முடிக்க கூடியவன்.
சொற்பொருள் விளக்கம்
பெரும்பாழ் செய்தும்- பெரிய நாசம் செய்தும், அமையான் – சினம் அடங்கான், மருங்கு அற – முழுவதும் (மருங்கறக் கெட்டு விடும்.நாலடி .8) மலை அகழ்க்குவனே – மலையைப் பெயர்த்து எடுப்பான் , கடல் தூர்க்குவனே - கடலை நீரின்றித் தூர்த்து விடுவான், வான் வீழ்க்குவனே- வானத்தை வீழ்த்துவான், வளி மாற்றுவான்- காற்றின் திசையை மாற்றுவான், என - என்று ( புகழ்ந்து கூறுமாறு) தான் முன்னிய - தான் செய்ய நினைத்த , துறை போகலின் – காரியத்தை முடித்தல், (எண்ணியவை எல்லாம் துறை போதல் ஒல்லுமோ. கலி. 67)
திருமாவளவனின் வெற்றிச் சிறப்பு
பல்ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர்
மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மாத்தானை மற மொய்ப்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாயக் (271- 282)
(க.ரை) ஒளிநாட்டார் பலரும் பணிந்து அடங்கவும் , தொன்மையான அருவா நாட்டினர் பணிந்து ஏவலைக் கேட்டு நடக்கவும், வட நாட்டவர் தோல்வியுறவும், குடநாட்டவரின் ஊக்கம் குறையுமாறும் வெற்றி கொண்டவன். பாண்டியனுடைய வலிமை அழியுமாறு , சினம் கொண்டு சீறி எழுந்து நிலைபெற்ற மதிலரண்களைக் கைப்பற்றும் செருக்கும் , வலிமையோடு போர் செய்யும் முயற்சியினையுமுடைய பெரும்படையினை உடையவன் . வீரமும் வலிமையும் ஒருங்கே பெற்ற திருமாவளவன், சினம் மிகுந்து தன் சிவந்த கண்ணால் நோக்கிய பார்வையிலே , சிறிய பகுதிகளை ஆண்டுவரும் பொதுவரின் (இடைக்குல மன்னர் ) சந்ததியினரும் அழிந்தனர். இருங்கோவின் குலமும் அழிந்தது.
சொற்பொருள் விளக்கம்
பல் ஒளியர் – பலராகிய • ஒளியர் (ஒளிநாட்டில் சிறந்து விளங்கிய வேளாளர்) பணிபு ஒடுங்க – பணிந்து அடங்கவும் , தொல் அருவாளர் – தொன்மையான அருவா நாட்டினர், தொழில் கேட்ப – ஏவலைக் கேட்டு நடக்க , (தொன்று மொழிந்து தொழில் கேட்ப மதுரை. 72) , வடவர் வாட – வடதிசை நாட்டவர் தோல்வியுறவும், குடவர் கூம்ப – குட நாட்டார் ஊக்கம் குறையவும், சீறி மன்னர் – சினந்து பகைவரின் , மன் எயில் கதுவும் – நிலைபெற்ற மதிலைக் கைப்பற்றிய , தென்னவன் – பாண்டியன், திறல் கெட – வலிமை அழியவும் , மதன் உடை – செருக்கும உடைய , நோன்தாள்- வலிய முயற்சி மாத்தானை பெரும்படை , மற மொயம்பு- வீரம்,வலிமை , புன் பொதுவர் – சிறிய பகுதியை ஆட்சி செய்த இடைக்குல மன்னர்கள், வழி பொன்ற – வழித்தோன்றியோரும் அழியுமாறும் , இருங்கோவேள் மருங்கு சாய – இருங்கோவேளின் குலம் முழுவதையும் அழித்தும்.
வளம் பெருக்கிய வளவன்
காடுகொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்
பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயில்தொறும் புதைநிறீஇப்
பொருவேம் எனப்பெயர் கொடுத்து
ஒருவேம் எனப் புறக்கொடாது
திருநிலைஇய பெருமன் எயில்
மின்னொளி எறிப்ப ( 283-282)
(க.ரை) காட்டினை அழித்து மக்கள் வாழ்வதற்குரிய நாடாக்கினான். குளங்களைத் தோண்டி நாட்டின் வளத்தைப் பெருக்கினான். தலைநகராக விளங்கிக் கொண்டிருந்த உறையூருக்குப் பின்னர் காவிரிப்பூம்பட்டினத்தையும் தலைநகராக்கி, கோயில்களோடு குடிமக்கள் வாழ்வதற்கான இடங்களையும் உருவாக்கினான். பெரிய வாயில்களையும் சிறிய வாயில்களையும் அமைத்தான். மதில்கள் தொறும் மறைவிடங்கள் (புதைகுழிகள் ) நிறுவினான்.
சொற்பொருள் விளக்கம்
காடு கொன்று – காட்டினை அழித்து , நாடாக்கி – நாடாக ஆக்குதல், குளம் தொட்டு – குளத்தினைத் தோண்டி , பிறங்குநிலை மாடத்து – உயர்ந்த நிலைகளைக் கொண்ட மாடத்தினையுடைய , (பிறங்கு நிலை மாடத்து – புறநா. 69) உறந்தைப் போக்கி – உறந்தைக்குப் பின்பு (இவை போக்கிச் சொல்லும் தொல் . பொருள் . 444. உரை) (காவிரிப்பூம்பட்டினத்திலும்) கோயிலோடு குடிநிறீஇ – கோயில்களோடு குடியிருப்புகளையும் (மக்கள் வாழ்வதற்கான இடங்களையும் ) உருவாக்கி, வாயிலொடு – பெரிய வாயில்களோடு , புழை அமைத்து – சிறிய வாயில்களையும் அமைத்து, ஞாயில்தொறும் – மதில்கள் தொறும் , புதை நிறீஇ – வீரர்கள் பதுங்குவதற்கான மறைவிடங்களை நிறுவி, பொருவேன் என – பகைவர்களை எதிர்த்துப் போர் புரிவோம் என்று கூறி , ஒருவேம் என – பின்னர் போர் புரிதலிலிருந்து நீங்கினோம் என , புறக்கொடாது – புறங்கொடுத்துச் செல்லாது, (வீரர்கள் போரில் நின்று போர் செய்தமையால் ),. திரு நிலைஇய – வெற்றியாகிய செல்வம் குடியிருக்கும் , பெருமன் எயில் – பெரிய நிலைபெற்ற மதில், மின் ஒளி – மின்னல் ஒளிபோன்று , எறிப்ப – ஒளி வீச,
திருமாவளவனின் புறவாழ்வும் அகவாழ்வும்
.............................தன் ஒளி மழுஙகி
வீசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பருஏர் எறுழ்க் கழற்கால்
பொன்தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்
முற்றுஇழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
நெஞ்சாந்து சிதைந்த மார்பில் ஒண்பூண்
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமாவளவன்.........................(292-299)
(க.ரை) திருமாவளவனின் வெற்றியினைக் கேட்டு, வாரினால் முழவினைக்(அடிக்காது ) கட்டிய பகைமன்னர்கள், தம் புகழ் குறைந்துவிடுமோ என்று அஞ்சி ,திருமாவளவனின் அருளினைப் பெற, அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற மணிமுடி பொருந்துமாறு திருமாவளவனின் காலடியில் வீழ்ந்து வணங்குவர். அவர்தம் மணிமுடி பொருந்துகின்ற அழகும் வலிவும் உடையன திருமாவளவனின் கழலணிந்த கால்கள்.
பொன்னால் செய்த தொடியினை அணிந்த புதல்வர் ஓடிவந்து மார்பில் விளையாடுவதாலும் , உடலெங்கும் அணிகலன்களை அணிந்துள்ள மனைவியரின் முலைகள் பொருவதாலும் மார்பில் பூசிய சந்தனம் அழிந்த மார்பினையுடையவன்.
ஒளி வீசும் பெரிய அணிகலன்களை அணிந்தவன்; இளஞ்சிங்கத்தைப் போன்று பகைவரை வருத்தும் இயல்யினையுடையவன் திருமாவளவன்.
சொற்பொருள்விளக்கம்
தன் ஒளி மழுங்கி – தன் புகழ் குறைந்து வீசி – அடித்து, பிணி முழவின் – கட்டப்பட்ட முரசின் , வேந்தர் சூடிய – பகை மன்னர் பரவும் (துதிக்கும ) வணங்கும்) , பசுமணி பொருத- அழகிய மணிகய் பதிக்கப்பெற்ற , பருஏர் எறுழ்க் கழற்கால் – மிக்க அழகும வலிவும் உடைய கழலணிந்த கால் , பொன் தொடிப் புதல்வர்- பொன்னால் செய்த தொடியணிந்த புதல்வர் , ஓடி ஆடவும் – ஓடி விளையாடவும், முற்றுஇழை மகளிர் – (உடலெங்கும் ) முற்றிலும் அணிகலன் அணிந்த மனைவியர், முகிழ்முலை திளைப்பவும்- குவிந்த மார்பகம் பொருவதாலும், செஞ்சாந்து – சந்தனக் கலவை , சிதைந்த மார்பகம் – அழிந்த மார்பும் ஒண்பூண் – ஒளி வீசும் அணிகலன், அரிமா அன்ன- சிங்கம் போன்ற , அணங்குடை துப்பின் – வருத்தும் வலிமை.
தலைவன் தலைவியைப் பிரியாமைக்கான காரணங்கள்
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும தண்ணிய , தடமென் தோளே (299- 301)
(க.ரை) திருமாவளவன் பகைவர் மேல் எறிவதற்கு ஓங்கிய வேலைக்காட்டிலும் கொடியது நான் தலைவியைப் பிரிந்து செல்லக்கூடிய கானம். அம்மன்னனின் செங்கோலைக் காட்டிலும் குளிர்ச்சியுடையன என் தலைவியின் பெரிய மென்மையான தோள்களே.

சொற்பொருள் விளக்கம்
தெவ்வர்க்கு – பகைவரை அழித்தற்கு , ஓக்கிய – எறிந்த , வேலினும்- வேலைக் காட்டிலும் , வெய்ய – கொடியது. கானம் – (நான் செல்லும்) காடு, அவன் கோலினும் – அவன் செங்கோலைக் காட்டிலும், தண்ணிய – குளிர்ச்சியுடைய, தடமன்தோளே – பெரிய மென்மையான தோள்களே.
முட்டாச்சிறப்பின் பட்டினம் பெறினும் வாரேன் என்று தலைவியைப் பிரியாமையும் , திருமாவளவன் தெவ்வர்க்கு ஓங்கிய வேலினும் வெய்ய கானம் , அவன் கோலினும் தண்ணிய தடமென் தொளே என்று பிரியாமைக்கான காரணத்தையும் சொல்லுவது பட்டினப்பாலை. பிரியாமையும், பிரியாமைக்கான காரணத்தையும் சொன்ன இலக்கியம் பாலைத்திணையின் பாற்படுமா?
‘வாரேன் ’ என்று சொன்ன சொல் , தலைவியின் மேல் கொண்ட காதலின் வெளிப்பாட்டில் வந்த சொல்லாக இருக்குமே தவிர , பிரியாது இருத்தல் , ‘ வினையே ஆடவர்க்கு உயிரே’ என்ற தலைவனின் கடமை உணர்விற்குப் புறம்பானதன்றோ? ஆதலின்.
‘செலவிடை அழுங்கல் செல்லாமை அன்றே
வன்புறை குறிதத தவிர்ச்சியாகும்’ (கற்பியல் .44)

என்ற தொல்காப்பிய நூற்பாவின் கருத்தினை ஒத்து தலைவன் பிரிவான் என்பதே புலனாகிறது. வாரேன் என்றது பிரியாமை அல்ல , சிறிது பொழுது செல்லாமல் காலந்தாழ்த்துதல் என்றே துணியலாம்.
காவிரியின் பெருமையும் , சோழ நாட்டின் வளமும், காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்புகளையும் , சோழநாட்டை ஆண்ட மன்னன் திருமாவளவனின் பகைவரை அழித்த திறனும் என்று புறச்செய்திகளையே கூறி, அக இலக்கியமாக்கிய பெருமைக்குரியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

பட்டினப்பாலை மூலம்

காவிரியின் பெருமை
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற் பாடிய தளி உணவின்
புள் தேம்பப் புயல் மாறி
05. வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத் தலைய கடற்காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்

மருதநிலத்தின் வளமை

விளைவு அறா வியன் கழினிக்
கார்க்கரும்பின் கமழ் ஆலைத்
10. தீத் தெறுவின் நீள் நெய்தற்
பூச் சாம்பும் புலத்து ஆங்கண்
காய்ச் செந்நெல் கதிர்அருந்து
மோட்டு எருமை முழுக் குழவி

15. கூட்டு நிழல் துயில் வதியும்
கோள் தெங்கின் குலை வாழைக்
காய்க் கமுகின் கமழ் மஞ்சள்.
இனமாவின் , இணர்ப் பெண்ணை
முதற் சேம்பின் முளை இஞ்சி

காவிரிப்பூம்பட்டினத்தின் செல்வச் செழிப்பு

20 அகல்நகர் வியன்முற்றத்துச்
சுடர்நுதல் மட நோக்கின்
நேரிழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொற்கால் புதல்வர் புரவிஇன்று உருட்டும்

25. முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்
விலங்குபகை அல்லது கலங்குபகை அறியாக்
கொழும் பல்குடிச் செழும்பாக்கத்துக்

காவிரிப்பூம்பட்டினத்துத் தோட்டங்கள், தோப்புகள் , பூஞ்சோலைகள்

குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
30 நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி
பணைநிலைப் புரவியின்அணைமுதல் பிணிக்கும்
கழிசூழ் படப்பைக் கலியாணர்ப்
பொழில் புறவின் பூந்தண்டலை

பொய்கையும் ஏரியும்

மழை நீங்கிய மா விசும்பின்
35 மதி சேர்ந்த மக வெணமீன்
உரு கெழு திறல் உயர் கோட்டத்து
முருகு அமர் பூ முரண்கிடக்கை
வரி அணிசுடர் வான் பொய்கை
இரு காமத்து இணை ஏரிப்

காவிரிப்பூம்பட்டினத்து அட்டிற் சாலைகள்

40 புலிப்பொறிப் போர்க் கதவின்
திருத்துஞ்சும் திண்காப்பின்
புகழ் நிலைஇய மொழி வளர
அறம் நிலைஇய அகன் அட்டில்
சோறு ஆக்கிய கொழும் கஞ்சி

45. யாறு போலப் பரந்து ஒழுகி
ஏறு பொரச் சேறு ஆகித்
தேர் ஓடத் துகள் கெழுமி
நீராடிய களிறு போல
வேறுபட்ட வினை ஓவத்து

50. வெண் கோயில் மாசு ஊட்டும்

மாட்டுக் கொட்டில்

தண்கேணித் தகை முற்றத்துப்
பகட்டு எருத்தின் பலசாலைத்

காவிரிப்பூம்பட்டினத்துத் தவப்பள்ளியும் வேள்விச்சாலையும்

தவப்பள்ளித் தாழ் காவின்
அவிர் சடைமுனிவர் அங்கி வேட்கும்

55. ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம்
மாயிரும் பெடையொடு இரியல் போகிப்
பூதம் காக்கும் புகல் அரும் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும்

விளையாட்டுக்களத்தில் மறவர்களின் மற்போரும் வாட்போரும்

முதுமரத்த முரண்களரி
60. வரிமணல் அகன்திட்டை
இருங்கிளை இனன் ஒக்கல்
கருந்தொழில் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமைப் புழுக்குண்டும்

65. வறன் அடும்பின் மலர்மலைந்தும்
புனல் ஆம்பல் பூச்சூடியும்
நீல்நிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாள்மீன் விராய கோள்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்

70 கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப்
பெருஞ்சினத்தால் புறங்கொடாஅது
இருஞ்செருவின் இகல் மொய்ம்பினோர்
கல் லெறியும் கவண்வெரீஇப்
புள் இரியும் புகர்ப் போந்தைப்

காவிரிப்பூம்பட்டினத்து சேரிப்பகுதி

75 பறழ்ப்பன்றிப் பல்கோழி
உறைக்கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாடக்

பரதவரின் இருப்பிடம்

கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
நடுகல்லின் அரண் போல
80 நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய
குறுங்கூஐர குடிநாப்பண்
நிலவடைந்த இருள்போல
வலை உணங்கும் மணல் முன்றில்

பரதவர்களின் வழிபாடும் விளையாட்டும்

வீழ்த்தாழைத் தாள் தாழ்ந்த
85 வெண் கூதாளத்துத் தண்பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனை சேர்த்திய வல் அணங்கினான்
மடல் தாழை மலர் மலைந்தும்
பிணர்ப் பெண்ணைப் பிழிமாந்தியும்

90 புன்தலை இரும்பரதவர்
பைந்தழை மாமகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது
உவவு மடிந்து உண்டாடியும்

சங்கமுக நீராடலும் , பகல் விளையாட்டும்

புலவுமணல் பூங்கானல்
95. மாமலை அணிந்த கொண்மூப் போலவும்
தாய்முலை தழுவிய குழவி போலவும்
தேறுநீர்ப் புணரியோடு யாறுதலை மணக்கும்
மலிஓதத்து ஒலிகடல்
தீது நீங்க கடலாடியும்

100. மாசு போகப் புனல் படிந்தும்
அலவன் ஆட்டியும் உரவுத்திரை உழக்கியும்
பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டும்
அகலாக் காதலொடு பகல் விளையாடிப்
பெற்றகரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூமலி பெருந்துறைத்

இரவு நேர நிகழ்வுகள்

105 துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்து
மட்டு நீக்கி மது மகிழ்ந்து
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
மகளிர் கோதை மைந்தர் மையவும்

110 நெடுங்கால் மாடத்து ஒள்ளெரி நோக்கிக்
கொடுந்திமில் பரதவர் குருஉச்சுடர் எண்ணவும்
பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும்
வெண்ணிலவின் பயன்துய்த்தும்
கண்ணடைஇய கடைக்கங்குலான்

சுங்கம் (வரி) வசூலிப்போரின் தன்மை

115 மாஅகாவிரி மணங்கூட்டும்
தூஉ எக்கர்த் துயில் மடிந்து
வாலிணர் மடல்தாழை
வேலாழி வியன்தெருவில்
நல்லிறைவன் பொருள்காக்கும்

120 தொல்லிசைத் தொழில்மாக்கள்
காய்சினத்த கதிர்ச் செல்வன்
தேர்ப்பூண்ட மாஅபோல
வைகல்தொறும் அசைவின்றி
உல்குசெயக் குறைபடாது


பல்பொருளும் குவிந்து கிடக்கும்
காவிரிப்பூம்பட்டினத்துப் பண்டகசாலை


125. வான்முகந்தநீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்
மாரி பெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்

130 அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி
அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல் அணங்கின்நோன்

135 புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி
மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன்
வரையாடு வருடைத் தோற்றம் போலக்
கூருகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை

140 ஏழகத் தகரொடு உகளும் முன்றில்

உயர் மாடத்து மகளிர் இயல்பும் ,
விழா நீங்காத கடைவீதியும்

குறுந்தொடை நெடும்படிக்கால்
கொடுந்திண்ணை பல்தகைப்பின்
புழைவாயில் போகு இடைகழி
மழைதோயும் உயர்மாடத்துச்

145 சேவடிச் செறிகுறங்கின்
பாசிழைப் பகட்டு அல்குல்
தூசுடைத் துகிர்மேனி
மயில்இயல் மான்நோக்கின்
கிளிமழலை மென்சாயலோர்

150 வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்கும்
காந்தள்அம் துடுப்பின் கவிகுலை அன்ன
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்

155 குழல் அகவ யாழ்முரல
முழவு அதிர முரசுஇயம்ப
விழவுஅறா வியல் ஆவணத்து

காவிரிப்பூம்பட்டினத்தில்
உயர்த்தியுள்ள பல்வேறு கொடிகள்
தெய்வக்கொடி

மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
மலரணி வாயில் பலர்தொழு கொடியும்

வீரர்களுக்கான கொடி

160 வருபுனல் தந்த வெண்மணல் கான்யாற்று
உருகெழு கரும்பின் ஒண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசிப் பலிசிதறிப்

165 பாகுஉகுத்த பசுமெழுக்கின்
காழூன்றிய கவிகிடுகின்
மேல் ஊன்றிய துகிற் கொடியும்

கல்விக் கொடி

பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
170 உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்



வணிகர் கொடி

வெளில் இளக்கும் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்துறைத்
தூங்குநாவாய் துவன்று இருக்கை
மிசைக்கூம்பின் நசைக்கொடியும்

கள் விற்போர் ஏற்றியுள்ள கொடி

175 மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன்பொரிக்கும்ஒலிமுன்றில்
மணல் குலைஇ மலர் சிதறிப்
பலர் புகுமனைப் பலிப் புதவின்
நறவு நொடைக் கொடியோடு

பல்கொடி விளங்கும் பட்டினம்

180 பிற பிறவும் நனிவிரைஇப்
பல்வேறு உருவின் பதாகை நீழல்
செல்கதிர்நுழையாச்செழுநகர்வரைப்பின்

செல்வ வளம் நிறைந்த தெருக்கள்

செல்லா நல்லிசை அமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
185 காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் முத்தும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்

190 ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகின்

காவிரிப்பூம்பட்டினத்து உழவர்களின் நல்லியல்புகள்

நீர்நாப் பண்ணும் நிலத்தின் மேலும்
ஏமாப்ப இனிது துஞ்சிக்
195 கிளைகலித்துப் பகைபேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
கொலை கடிந்தும் களவு நீக்கியும்
அமர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்

200 நல்லானொடு பகடுஓம்பியும்
நான்மறையோர் புகழ்பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும்பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை
கொடு மேழி நசை உழவர்

வணிகர்களின் சிறப்பு

205 நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉம் குறை கொடாது

210 கொடுப்பதூஉம் குறை கொடாது
பல்பண்டம் பகிர்ந்து வீசும்
தொல்கொண்டி துவன்று இருக்கைப்

பன்னாட்டிரும் கலந்தினிது உறையும் புகார்
பல் ஆயமொடு பதிபழகி
வேறு வேறு உணர்ந்த முதுவாய்ஒக்கல்

215 சாறுஅயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு
மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்துஇனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம்..............

தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறித்
தலைவியைப் பிரிதலைத் தவிர்த்தல்

....................பெறினும்
வார் இரும் கூந்தல் வயங்குஇழை ஒழிய
220 வாரேன் வாழிய நெஞ்சே.........

திருமாவளவன் நாட்டினை ஆளும் உரிமையினைப் பெறல்

................. கூருகிர்க்
கொடுவரிக் குருளைக் கூட்டுள் வளர்ந்தாங்குப்
பிறர், பிணியகத்து இருந்து பீடுகாழ் முற்றி
அருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று
பெருங்கை யானை பிடிப்புக்கு ஆங்கு

225 நுண்ணிதின் உணரநாடி நண்ணார்
செறிவுடைத் திண்காப்பு ஏறிவாள் கழித்து
உருகெழு தாயம் ஊழின் எய்தி

திருமாவளவனின் போர்த்திறன்

பெற்றவை மகிழ்தல் செய்யான் செய்றோர்
கடிஅரண் தொலைத்த கதவுகொல் மருப்பின்

230 முடியுடைக் கருந்தலை புரட்டும் முன்தாள்
உகிருடை அடிய ஓங்கு எழில் யானை
வடிமணிப் புரவியொடு வயவர் வீழப்
பெருநல் வானத்துப் பருந்துயஉலாய் நடப்ப
தூறுஇவர் துறுகல் போலப் போர்வேட்டு

235 வேறுபல் பூளையொடு உழிஞை சூடிப்
பேய்க்கண் அன்ன பிளிறுகடி முரசம்
மாக்கண் அகலறை அதிர்வன முழங்க
முனைகெடச் சென்று முன்சமம் முருக்கித்
தலைதவச் சென்று தண்பணை எடுப்பி

பகைவர் நாட்டு மருத நில வளம் அழிதல்

240 வெண்பூக் கருமபொடு செந்நெல் நீடி
மாஇதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி
கராஅம் கலித்த கண்அகன் பொய்கை
கொழுங்கால் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று

245 அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும்

கந்துடை பொதியிலின் நிலை

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்

250 பருநிலை நெடுந்தூண் ஒக்கத் தீண்டிப்
பெருநல் யானையொடு பிடிபுணர்ந்து உறையவும்

விழா இன்றிக் கிடந்த பொதுமன்றம்

அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்

255 பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச்
சிறுபூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிப்பவும்
அழுகுரல் கூகையொடு ஆண்டலை விளிப்பவும்
கணங்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇப்

260 பிணம்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும்

செழுநகரின் சீர்குலைந்த தன்மை

கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்தண்டு ஆனாப் பெருஞ்சோற்று அட்டில்
ஒண்சுவர் நல்இல் உயர்திணை இருந்து
பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழுநகர்த்

265 தொடுதோல் அடியர் துடிபடக் குழீஇக்
கொடுவில் எயினர் கொள்ளை உண்ட
உணவுஇல் வறுங்கூட்டு உள்ளகத்து இருந்து
வளைவாய்க் கூகை நன்பகல் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவின் அழிய

சோழனின் திறல்

270 பெரும்பாழ் செய்தும் அமையான் மருங்கு அற
மலை அகழ்க்குவனே கடல்தூர்க் குவனே
வான் வீழ்க்குவனே வளிமாற்றுவன் எனத்
தான் முன்னியதுறை போகலின்
பல்ஒளியர் பணிபு ஒடுங்க

275 தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர்
மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மாத்தானை மற மொய்ப்பின்

280 செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாயக்

சோழநாட்டின் வனத்தினைக் காத்தல்

காடுகொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம் பெருக்கிப்

285 பிறங்குநிலை மாடத்து உறந்தை போக்கிக்
கோயிலொடு குடிநிறீஇ
வாயிலொடு புழையமைத்து
ஞாயில்தொறும் புதைநிறீஇப்
பொருவேம் எனப்பெயர் கொடுத்து

290 ஒருவேம் எனப் புறக்கொடாது
திருநிலைஇய பெருமன் எயில்



திருமாவளவனின் அகவாழ்வுச் சிறப்பு

மின்ஒளி எறிப்பத் தன்னொளி மழுங்கி
வீசிபிணி முழவின் வேந்தர் சூடிய
பசுமணி பொருத பருஏர் எறுழ்க் கழற்கால்

295 பொன்தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்
முற்றுஇழை மகளிர் முகிழ்முலை திளைப்பவும்
நெஞ்சாந்து சிதைந்த மார்பில் ஒண்பூண்
அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமாவளவன்.........................

திருமாவளவின் வீரமும், ஈரமும், பாலைத்திணையின் பொருளும்

.........................................தெவ்வர்க்கு ஓக்கிய
300 வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய , தடமென் தோளே.

1 comment:

  1. அம்மா வணக்கம் தங்கள் தமிழ்ப் பணி மிகவும் சிறப்பான பணியாகும். நான் கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்திற்குரிய பாடங்கள் அவற்றிற்கான விளக்கங்கள் போன்ற இணையத்தில் கிடைப்பவற்றை தொகுத்து அவர்களது இணைய முகவரியோடு கல்லூரித்தமிழ் என்னும் வலைப்பூவில் வெளியிட்டு வருகின்றேன். அதில் பட்டினப்பாலைக்கான இந்த பதிவையும் இணைத்துள்ளேன். உங்கள் வலைப்பூவிற்கான இணைப்பையும் அதில் கொடுத்துள்ளேன். பார்த்து கருத்து கூறவும். நன்றி. அன்புடன் ஈகைவேந்தன்

    ReplyDelete